ஆசிய விளையாட்டுப் போட்டி: ராம்குமார் ராமநாதன் ஜோடி டென்னிஸில் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
வியாழன் (செப்டம்பர் 28) அன்று ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஜோடி முன்னேறியுள்ளது. முன்னதாக, ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஜோடி அரையிறுதியில் தென்கொரியாவின் சோனோன்வூ குவோன் மற்றும் சியோஞ்சன் ஹாங் ஜோடியை 6-1, 6-7, 10-0 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு வரலாற்றில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய 7வது இந்திய ஜோடியாக சாகேத் மைனேனி மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியுள்ளனர். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், ராம்குமார் மற்றும் சாகேத் ஜோடி குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி டென்னிஸில் இந்தியாவின் செயல்திறன்
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் டென்னிஸில் இந்தியா இதுவரை 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. தற்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள சாகேத் மைனேனி தனது 3வது ஆசிய விளையாட்டுப் பதக்கத்தை உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் முன்னதாக, 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சனம் சிங்குடன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், சானியா மிர்சாவுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றார். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஜோடி, தங்கத்திற்கான வேட்டையில் தாய்லாந்தின் இசரோ ப்ருச்யா மற்றும் ஜோன்ஸ் மாக்சிமஸ் பராபோல் ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.