Asian Games 2023, நாள் 1: 'செஸ்' மற்றும் 'டென்னிஸி'ல் முன்னேறும் இந்திய வீரர்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய நாளின் தொடக்கத்திலேயே படகோட்டுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆகிய விளையாட்டுக்களில் ஐந்து பதக்கங்களை வென்று அசத்தியது இந்தியா. அதன் பின்பு தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் முன்னேறினாலும், பதக்கப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லவில்லை. எனவே, மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது இந்தியா. 12 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் சீனாவும், 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் கொரியாவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன.
வாலிபால்: ஜப்பானிடம் சரணடைந்த இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வாலிபால் விலையாட்டின் காலிறுதிச் சுற்றில் இன்று தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் ஜப்பானை எதிர்கொண்டது இந்தியா. முன்னதாக, தரவரிசையில் 43வது இடத்தில் உள்ள தைவானையும், 27வது இடத்தில் இருக்கும் கொரியாவையும் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தது 73வது இடத்தில் இருக்கும் இந்திய ஆண்கள் வாலிபால் அணி. ஜப்பானுடன் கடுமையாகப் போட்டியிட்டு 16-25, 18-25, 17-25 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது இந்தியா. எனினும், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் இந்திய வாலிபால் அணியின் இந்த செயல்பாடுகள் மிகவும் வியப்பூட்டுபவையாகவே இருக்கின்றன. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா விளையாடவிருக்கிறது.
டென்னிஸ்: ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்
இன்றைய நாளில் முன்னதாக நடைபெற்ற, டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 6-0, 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தற்போது அதனைத் தொடர்ந்து, ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாகெத் மைனெனி மற்றும் ராம்குமார் ராமநாதன் இணையானது, 6-2, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. கால்பந்து: தோல்வியைத் தழுவிய பெண்கள் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் பெண்கள் கால்பந்து போட்டியில் குரூப் Bயில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணியானது, குழு பிரிவுப் போட்டியில் தாய்லாந்து அணியிடம் 0-1 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
செஸ்: ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செஸ் விளையாட்டில், ஆண்கள் மற்றும் பெண்கள் தனி நபர் போட்டிகளின் முதல் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில், ஆண்கள் பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட அர்ஜூன் எரிகிஸை மற்றும் விதித் குஜராத்தி ஆகிய இருவரும் தங்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை வெற்றி பெற்று இருவரும் தலா 1 புள்ளியைப் பெற்றிருக்கின்றனர். அதேபோல், பெண்கள் பிரிவிலும், இந்தியா சார்பில் போட்டியிட்ட கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோனாவள்ளி ஆகிய இருவரும் தங்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை வெற்றி கொண்டு தலா 1 புள்ளியைப் பெற்றிருக்கின்றனர். செஸ் விளையாட்டில் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து ஒன்பது சுற்றுகள் விளையாடப்பட்டு பின்னர், புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.