ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!!
ஆசிய உள் அரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உள் அரங்கு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட, இந்தியாவிலிருந்து 26 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் 16.98 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் இந்திய அளவில் மும்முறை தாண்டுதலில் தேசிய சாதனையாக இருந்த அமர்ஜீத் சிங்கின் 16.26 மீட்டரை விட அதிக தூரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள்
ஆசிய உட்புற தடகள சாம்பியன்ஷிப்பில், பிரவீன் சித்திரவேலை தவிர்த்து ஆசிய சாம்பியனான தஜிந்தர்பால் சிங் தூர் ஆடவர் குண்டு எறிதலில் தங்கம் வென்றார். மேலும் இதில் கரண்வீர் வெள்ளி வென்றார். பெண்களுக்கான பென்டத்லானில் ஸ்வப்னா பர்மன் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு புதிய தேசிய சாதனையையையும் படைத்துள்ளார். மேலும் நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின், தகுதிச் சுற்றில் 7.93 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை பிடித்த அதே வேளையில், புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார். இந்தியா தற்போது வரை ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் மூன்று பதக்கங்களை பெற்றுள்ளது.