
IND vs SL : இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி துனித் வெல்லலகே அசத்தல்
செய்தி முன்னோட்டம்
கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் துனித் வெல்லலகே அபாரமாக பந்துவீசி முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
20 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே தனது 10 ஓவர்களில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது முதல் ஐந்து விக்கெட்டுகளாகும்.
வெல்லலகேவின் அபார பந்துவீச்சால், இந்தியாவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில், இந்தியா 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
dunith wellalage numbers in odi
இந்தியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட் எடுத்த நான்காவது இலங்கை சுழற்பந்து வீச்சாளர்
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், துனித் வெல்லலகே இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஆனார்.
முன்னதாக, முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ் மற்றும் அகிலா தனஞ்சய ஆகிய மூன்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.
வெல்லலகே ஒட்டுமொத்தமாக 13 ஒருநாள் போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 5.30 என்ற சிறந்த எகானாமியில் வீழ்த்தியுள்ளார்.
2023 ஆசியக் கோப்பையில் இதுவரை ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் உள்ளார்.
ஹாரிஸ் ரவுப் மற்றும் தஷ்கின் அகமதுவும் தலா 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.