Loading...
அர்ஜென்டினா கால்பந்து தலைவர் மீது எஃப்பிஐ அதிரடி நடவடிக்கை! உலகக்கோப்பைக்குப் பின் வெடித்த சர்ச்சை
அர்ஜென்டினா கால்பந்து தலைவர் மீது எஃப்பிஐ அதிரடி நடவடிக்கை

அர்ஜென்டினா கால்பந்து தலைவர் மீது எஃப்பிஐ அதிரடி நடவடிக்கை! உலகக்கோப்பைக்குப் பின் வெடித்த சர்ச்சை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 23, 2026
01:12 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர் நிறைவடைந்து, அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி தனது தாய்நாட்டிற்குத் திரும்ப ஆயத்தமான வேளையில், ஒரு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கிளாடியோ சிகி டாபியாவிடம் அமெரிக்கக் கூட்டாட்சி புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பின் விளம்பர மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் பல நூறு மில்லியன் டாலர் நிதி, அமெரிக்க வங்கிகள் வழியாக சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு பணமோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணை

விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணை

நியூயார்க் விமான நிலையத்தில் அர்ஜென்டினா அணி வீரர்கள் விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த போது, அமெரிக்க சட்ட அமலாக்க முகமைகள் தலையிட்டு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

அர்ஜென்டினா கால்பந்து தலைவர் கிளாடியோ டாபியா மற்றும் பொருளாளர் பாப்லோ டோவிகினோ ஆகிய இருவரையும் எஃப்பிஐ முகவர்கள் சுமார் அரை மணி நேரம் பேருந்தில் வைத்து விசாரணை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் டாபியாவின் மின்னணு சாதனங்கள் மற்றும் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர் தற்காலிகமாகக் காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு

ஊடகங்களில் வெளியான இந்த அதிரடித் தகவல்களை அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு உடனடியாக மறுத்துள்ளது.

அமெரிக்க நீதிமன்றங்களால் தங்கள் தலைவர் கிளாடியோ டாபியாவோ அல்லது பொருளாளரோ நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்படவில்லை என்று கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது.

இருப்பினும், கூட்டமைப்பின் அதிகாரிகளுடன் தொடர்புடைய ஆவணங்களை வழங்குவதற்காக, மூன்றாம் நபர் ஒருவருக்கு அமெரிக்க கிராண்ட் ஜூரி மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பதை அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

வணிக ஒப்பந்தங்கள்

300 மில்லியன் டாலர் வணிக ஒப்பந்தங்கள் மீதான சந்தேகம்

அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பில் கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, நிதிப் பரிவர்த்தனைகள் மீதான கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்போடு தொடர்புடைய சுமார் 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சர்வதேச வணிக ஒப்பந்தங்களை அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிதியானது அமெரிக்க வங்கிகள் மூலம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டு மோசடி ஏதேனும் நடத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்க வங்கிகள்

அமெரிக்க வங்கிகள் வழியே நடந்த சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள்

வழங்கப்பட்டுள்ள வங்கி சான்றுகளின்படி, பல மில்லியன் டாலர் நிதியானது பல்வேறு அமெரிக்க நிதி நிறுவனங்களின் கணக்குகள் வழியாகக் கைமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பல கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்ட சில நாட்களிலேயே அடுத்தடுத்த கணக்குகளுக்குத் துரிதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது எஃப்பிஐ அதிகாரிகளின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை முடிந்து அணி தாய்நாடு திரும்பிய தருணத்திலேயே இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT