FIFA உலகக்கோப்பை அரைஇறுதி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
செய்தி முன்னோட்டம்
2026 ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரைஇறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்து 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. அட்லாண்டாவில் வியாழக்கிழமை (ஜூலை 16) நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 1966-க்குப் பிறகு முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இங்கிலாந்தின் 60 ஆண்டுகால கனவை நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா தகர்த்தெறிந்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
பிளான்
இங்கிலாந்தின் மாஸ்டர் பிளான் மற்றும் அந்தோணி கார்டனின் கோல்
போட்டியின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தாமஸ் துஷெலின் வியூகம் மிகக் கச்சிதமாக வேலை செய்தது.
அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியை பந்துடன் நகர விடாமல் டெக்லான் ரைஸ், ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் எலியட் ஆண்டர்சன் ஆகியோர் நடுகளத்திலேயே லாக் செய்தனர்.
முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில், போட்டியின் 55-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மோர்கன் ரோஜர்ஸ் கொடுத்த பாஸை, நியூகாசில் விங்கர் அந்தோணி கார்டன் அர்ஜென்டினாவின் வலைக்குள் துல்லியமாகச் செலுத்தி, இங்கிலாந்தை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.
கம்பேக்
இங்கிலாந்து செய்த தவறும் அர்ஜென்டினாவின் கம்பேக்கும்
கோல் அடித்த பிறகு, இங்கிலாந்து, இரண்டாவது கோலுக்கு முயற்சி செய்யாமல் தற்காப்பு ஆட்டத்திற்கு மாறியது.
இதுவே அவர்களுக்கு பெரிய வினையாக முடிந்தது.
இங்கிலாந்தின் இந்தத் தளர்வை பயன்படுத்திக் கொண்ட அர்ஜென்டினா ஆட்டத்தை தன்வசப்படுத்தியது.
39 வயதான லியோனல் மெஸ்ஸி இந்த போட்டியில் கோல் அடிக்காவிட்டாலும், நடுகளத்தில் இருந்து ஒரு சிறந்த 'கண்டக்டர்' போல ஆட்டத்தை வழிநடத்தினார்.
மெஸ்ஸியின் அசுர வேக பாஸ்களைப் பயன்படுத்தி, ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் என்ஸோ பெர்னாண்டஸ் அர்ஜென்டினாவிற்கான முதல் சமன் செய்யும் கோலை அடித்தார்.
அடுத்த 7 நிமிடங்களில் (77-வது நிமிடம்) மெஸ்ஸி கொடுத்த மற்றொரு அசிஸ்ட்டை பயன்படுத்தி, மாற்று வீரராகக் களம் புகுந்த லவுடாரோ மார்டினெஸ் அர்ஜென்டினாவின் வெற்றி கோலை அடித்தார்.
இறுதிப்போட்டி
இறுதிப்போட்டியில் ஸ்பெயினுடன் மோதல்
கேப் வெர்டே, எகிப்து, சுவிட்சர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக நாக்-அவுட் சுற்றுகளில் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வந்த அர்ஜென்டினா, இந்த போட்டியிலும் தங்களின் 'சாம்பியன்' மனப்பக்குவத்தை நிரூபித்துள்ளது.
இதன் மூலம், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பிரம்மாண்ட இறுதிப்போட்டியில், நடப்புத் தொடரில் தோல்வியே சந்திக்காத பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை அர்ஜென்டினா எதிர்கொள்ளவுள்ளது.
1962-ல் பிரேசில் அணிக்கு வரலாற்று பெருமையாக அமைந்த 'உலகக்கோப்பையைத் தக்கவைத்தல்' சாதனையை 64 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்த அர்ஜென்டினா இன்னும் ஒரு வெற்றி தூரத்தில் உள்ளது.