BANvsSL : சர்வதேச கிரிக்கெட்டில் கிரீஸில் களமிறங்கும் முன்னே அவுட்டான முதல் வீரர்; டைம் அவுட் விதி என்றால் என்ன?
கிரிக்கெட்டில் பலவிதமான அவுட்களில், மிகவும் அரிதானது 'டைம் அவுட்' ஆகும். டெல்லியில் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் போது, சர்வதேச போட்டியில் டைம் அவுட் செய்யப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற சோகமான சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் படைத்தார். இலங்கை அணியில் நம்பர் 6 ஆக களமிறங்கிய மேத்யூஸால் ஹெல்மெட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் தேவையான நேரத்தில் கிரீஸ் எடுக்க முடியவில்லை. இதையடுத்து வங்கதேச தரப்பு அவரை அவுட் என அறிவித்து வெளியேற்றுவதற்கு மேல்முறையீடு செய்த நிலையில், நடுவர்கள் மேத்யூஸ் மற்றும் வங்கதேச அணியுடன் கலந்தாலோசித்து இறுதியில் இலங்கை பேட்டரை வெளியேற்றினர்.
டைம் அவுட் விதி எப்போது பயன்படுத்தப்படுகிறது?
எம்சிசி விதி படி, ஒரு விக்கெட் வீழ்ந்த பிறகு அல்லது ஒரு பேட்டர் வெளியேறிய பிறகு, உள்வரும் பேட்டர், நேரம் கொடுக்கப்படாவிட்டால், உடனடியாக பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மேலும் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் வெளியேறினாலோ, 3 நிமிடங்களுக்குள் அடுத்த பந்தைப் பெறத் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில்,உள்வரும் பேட்டர் அவுட்டானதாக கருதப்பட்டு வெளியேற்றப்படுவார். இந்த விக்கெட் பந்துவீச்சாளரின் கணக்கில் சேர்க்கப்படாது. எம்சிசி விதிப்படி உள்வரும் பேட்டருக்கு 3 நிமிடங்கள் வழங்கப்பட்டாலும், ஐசிசி உலகக் கோப்பை 2023 விதிகளின்படி, பேட்டருக்கான நேர வரம்பு இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹெல்மெட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் சரியான நேரத்திற்குள் ஏஞ்சலோ மேத்யூஸால் கிரீஸில் இறங்க முடியாததால் வெளியேற்றப்பட்டுள்ளார்.