"அச்சுறுத்தலை தாண்டி தான் இந்தியா வந்தோம்" : ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய ஷாஹித் அப்ரிடி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த காலத்தில் இந்தியாவுக்கு விளையாட வந்தபோது, மும்பையில் ஒருவரால் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறியுள்ளார். 2023 செப்டம்பரில் ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து வருவதால், போட்டித் தொடரை நடுநிலையான நாட்டிற்கு மாற்றுவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலர் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கடந்த காலம் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்து, இந்திய அணி பாகிஸ்தான் வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஷாஹித் அப்ரிடி பேசியதன் முழு விபரம்
தோகாவில் நடந்த லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் மத்தியில் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய ஷாஹித் அப்ரிடி, கடந்த காலத்தில் இந்திய சுற்றுப்பயணத்தின் போது தனது அணியை மும்பையைச் சேர்ந்த ஒருவர் அச்சுறுத்தினார் என்று கூறினார். இருந்தாலும் தாங்கள் தைரியமாக இந்தியா வந்து விளையாடினோம் என்று கூறிய ஷாஹித் அப்ரிடி, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வந்தால், நாங்கள் முழு மனதுடன் அவர்களை வரவேற்று பாதுகாப்பாக பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுள் குறித்து விரிவாக பேசிய அப்ரிடி, 2005 இல் பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தபோது யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்குடன் உணவகங்கள் மற்றும் ஷாப்பிங்கிற்கு சென்ற இனிமையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.