கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க அம்பதி ராயுடு ஒப்பந்தம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பதி ராயுடு, வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) விளையாட உள்ளார். இதற்காக கரீபியன் பிரீமியர் லீக் அணியான செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக்கில் அவர் பங்கேற்று விளையாடினால், அந்த தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய வீரர் ஆவார். இதற்கு முன்பு இந்தியர்களில் பிரவின் தாம்பே மட்டுமே சிபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். முன்னதாக அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், வீரர்கள் ஓய்வு பெற்ற உடனேயே வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ விதித்துள்ள கட்டுப்பாட்டால் அதில் பங்கேற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.