'என் இலக்கு இன்னும் முடியவில்லை': லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தங்கத்தை குறிவைக்கும் அமன் செஹ்ராவத்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு 2026 போட்டியில் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் தங்கம் வென்று தாயகம் திரும்பிய 23 வயதான இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத், தனது அடுத்த இலக்கு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் எனத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஆசிய விளையாட்டின் இந்த வரலாற்று வெற்றி தனிப்பட்ட முறையில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா எனக் கேட்டதற்கு, "இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காகத் தங்கம் வெல்லும் வரை ஓயமாட்டேன்" என்று உறுதியுடன் பதிலளித்தார்.
ஆசிய விளையாட்டு
கடைசி 30 விநாடிகளில் நிகழ்ந்த த்ரில் வெற்றி
ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியன் வடகொரியாவின் ஹான் சோங் சாங்குடன் மோதிய அமன் ஷெராவத், கடுமையான சவாலை எதிர்கொண்டார்.
கடைசி 30 விநாடிகளில் 6-7 எனப் பின்தங்கியிருந்த அவர், மின்னல் வேகத்தில் புள்ளிகளை ஈட்டி 11-7 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றுத் தங்கம் வென்றார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன், 2025-ல் எடை மேலாண்மைப் பிரச்சினையால் தடையைச் சந்தித்தார்.
பின்னர் 61 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்றாலும், மீண்டும் 57 கிலோ பிரிவுக்குத் திரும்பி, கடுமையான உணவுமுறைக் கட்டுப்பாட்டுடன் ஆசிய விளையாட்டில் தனது தங்கக் கனவை நனவாக்கினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் 2028
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும்
இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மல்யுத்த வீரர்கள் யாரும் தங்கம் வென்றதில்லை என்ற குறையைத் தீர்ப்பதே தனது லட்சியம் என்று அமன் தெரிவித்துள்ளார்.
எடைப் பராமரிப்பு பெரும் சவாலாக இருந்தாலும், மக்கள் தரும் அன்பும் உந்துதலும் ஒலிம்பிக் தங்கத்தை நோக்கித் தன்னை வழிநடத்துவதாகக் குறிப்பிட்ட அவர், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பாக வரவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம் வெல்வதே தனது உடனடி கவனம் எனக் கூறினார்.