விராட் கோலி - கவுதம் காம்பிர் மோதல் : புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் காம்பிர் இடையேயான மோதல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பேட்டர் அகமது ஷெசாத் இந்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியதோடு, காம்பிர் பொறாமையால் இந்த செயலைச் செய்ததாக கூறியுள்ளார். "ஒரு பார்வையாளராக, ஒரு விளையாட்டு வீரராக, இது என் உணர்வுகளை மிகவும் காயப்படுத்தியது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த வீரருடன் (நவீன்-உல்-ஹக்) கோலி சண்டையிட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கவுதம் காம்பிர் தனது சொந்த நாட்டின் மிகப்பெரிய வீரரான கோலியிடம் ஏன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது எனக்குப் புரியவில்லை." என்று கூறினார்.