கேலோ இந்தியா விளையாட்டில் 7 பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன்!
மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டில், நடிகர் மாதவனின் மகனும் நீச்சல் வீரருமான வேதாந்த் 7 பதக்கங்களை வென்றுள்ளார். சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து வரும் வேதாந்த், இந்தியாவுக்காக சர்வதேச அளவில் ஜூனியர் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த 2022இல் நடந்த டேனிஷ் ஓபன் தொடரில், 1,500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் வெள்ளியும், 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் தங்கமும் வென்றிருந்தார். இந்நிலையில், தற்போது கேலோ இந்தியாவில் மகாராஷ்டிராவுக்காக விளையாடிய வேதாந்த் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். நடிகர் மாதவன் ட்விட்டரில் இதை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மாதவன் ட்வீட்
கேலோ இந்தியா விளையாட்டின் முக்கியத்துவம்
இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமே பிரபலமாக இருந்து வரும் நிலையில், அனைத்து விளையாட்டுகளையும் மேம்படுத்த திட்டமிட்ட அரசு, இளம் விளையாட்டு வீரர்களை கண்டறியும் ஒன்றாக இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளை நடத்தி வருகிறது. 2018இல் முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த விளையாட்டுகள் தற்போது ஐந்தாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இந்த முறை மகாராஷ்டிரா 56 தங்கம், 55 வெள்ளி மற்றும் 50 வெண்கல பதக்கங்கள் என அதிக பதக்கங்களுடன் மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. தமிழ்நாடு 52 பதக்கங்களை வென்று எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கிடையே கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கள் ஜம்மு காஷ்மீரில் 10 ஆம் தேதி தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.