உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அபிமன்யு அதிர்ச்சித் தோல்வி
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) செர்பியாவில் நடைபெற்ற நடைபெற்ற 70 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அபிமன்யு தோல்வியடைந்தார். இதன் மூலம், 2023 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கத்திற்காக இந்தியாவின் காத்திருப்பு தொடர்கிறது. முன்னதாக, அபிமன்யு, தஜிகிஸ்தானின் முஸ்தாபோ அக்மெடோவை எதிர்கொண்ட ரெபிசேஜ் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், அரையிறுதியில் அமெரிக்க வீரர் ஜைன் ஆலன் ரெதர்ஃபோர்ட் 3-1 என்ற கணக்கில் அபிமன்யுவை வீழ்த்தினார். இதையடுத்து நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில், அபிமன்யு ஆர்மேனியாவின் அர்மான் ஆண்ட்ரியாசினிடம் 1-12 என்ற கணக்கில் தொழில்நுட்ப மேன்மையில் தோற்று பதக்க வாய்ப்பை இழந்தார்.
இந்தியாவின் பதக்க வாய்ப்பை தக்கவைத்துள்ள சச்சின் மோர்
அபிமன்யு வெளியேறிய நிலையில், 79 கிலோ எடைப்பிரிவில் சச்சின் மோர் இன்னும் களத்தில் உள்ளதால், இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. முன்னதாக, அமன் ஷெராவத், நவீன் மாலிக், சந்தீப் மான் மற்றும் சுமித் மாலிக் போன்ற மல்யுத்த வீரர்களால் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு மேல் தொடர முடியவில்லை. அவர்களுக்கு தோல்வியை வழங்கிய மல்யுத்த வீரர்கள் எவரும் இறுதிப் போட்டியில் விளையாட முடியாததால், அவர்களால் ரெப்சேஜ் சுற்றுகளை விளையாட முடியாமல் வெளியேறியுள்ளனர். இந்தியாவின் வழக்கமான மல்யுத்த அணி ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகி வருவதால், இந்த தொடருக்கு இளம் மல்யுத்த வீரர்கள் கொண்ட குழு அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.