500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிரேக் மைல்ஸ் 32 வயதில் திடீர் ஓய்வு
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கிரேக் மைல்ஸ், தனது 32-வது வயதில் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். 15 ஆண்டுகால நீண்ட கிரிக்கெட் பயணத்தில் அனைத்து வகை ஃபார்மட்களிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இவர், க்ளூசெஸ்டர்ஷையர் கவுண்டி அணிக்காக அதிக விக்கெட்டுகளை சாய்த்த முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தார்.
மனநலம்
மனநலனுக்கு முன்னுரிமை அளிக்கவே இந்த முடிவு
தனது ஓய்வு முடிவு குறித்து மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை வெளியிட்டுள்ள கிரேக் மைல்ஸ், வருத்தத்துடனும் அதே சமயம் மிகுந்த பெருமையுடனும் எனது தொழில்முறை கிரிக்கெட் பயணத்தின் ஓய்வை அறிவிக்கிறேன்.
சமீப காலமாக நான் எதிர்கொண்டு வரும் மனநல சவால்களைக் கருத்தில் கொண்டு, எனது மன அமைதி மற்றும் நலனுக்கு முதலிடம் கொடுப்பதற்காகவே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தன் மீதே தான் வைத்திருந்த அதீத எதிர்பார்ப்புகளும், இலக்குகளை எட்டுவதில் ஏற்பட்ட அழுத்தங்களும் தனது திறமை மற்றும் செயல்பாடுகள் மீது சுய சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும், கிரிக்கெட் விளையாட்டின் நிலையற்ற தன்மை அந்த அழுத்தங்களை மேலும் தீவிரமாக்கியதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.
சாதனை
15 ஆண்டுகால உழைப்பும் 500 விக்கெட் சாதனையும்
தனது 16-வது வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி, 200-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஒன் டே கப் மற்றும் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற பெருமையையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு, நான் எதிர்பார்க்கும் தரத்திற்கு ஏற்ப இனி களத்தில் செயல்பட முடியாது என்ற நிலை உருவானதாலேயே இந்த விடைபெறும் தருணம் வந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இந்த சாதனைகளுக்காக தனக்குத்தானே முதல்முறையாக மனதார பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறி விடைபெற்றுள்ளார்.