2025இல் மேலும் மூன்று இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு; எப்படி தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறினாலும், இந்த ஆண்டு இந்தியா vs பாகிஸ்தான் மோதல் மேலும் மூன்று முறை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2025 ஆசிய கோப்பையை செப்டம்பரில் நடத்த திட்டமிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால், இந்த ஆசிய கோப்பை போட்டி டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடத்தப்படும்.
கிரிக்பஸ் அறிக்கையின்படி, செப்டம்பர் இரண்டாவது மற்றும் நான்காவது வாரங்களுக்கு இடையில் நடைபெறும் இந்த நிகழ்வின் போது கிரிக்கெட் ரசிகர்கள் மூன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்களைக் காண வாய்ப்புள்ளது.
ஆரம்பத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கோப்பையை இந்தியா-பாகிஸ்தான் அரசியல் சிக்கல் காரணமாக நடுநிலை மைதானத்தில் நடத்த வாய்ப்புள்ளது.
8 அணிகள்
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை
இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.
அணிகள் இரண்டு குழுக்களாக போட்டியிடும். இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்கள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும்.
அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இதன்படி, பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி ஒரே குழுவில் இடம் பிடித்தால், ஒரு குழு ஆட்டம், சூப்பர் ஃபோர் சுற்றுக்கு இரு அணிகளும் தகுதி பெற்றால் அங்கு ஒரு ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அங்கு ஒரு ஆட்டம் என மொத்தம் மூன்று ஆட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.