
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனையை முறியடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; எதில் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன் மழை பொழிந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடி ரன் குவித்தனர்.
அபிஷேக் ஷர்மா 24 ரன்களில் அவுட்டானாலும், டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் அடுத்து ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
இஷான் கிஷன்
இஷான் கிஷன் சதம்
பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டது.
டிராவிஸ் ஹெட் 67 ரன்களில் அவுட்டானாலும், இஷான் கிஷன் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 106 ரன்கள் குவித்தார்.
இது ஐபிஎல்லில் அவரது முதல் சதமாகும். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 286/6 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 287 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த ஸ்கோர் தற்போது ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிக ரன்களாக சாதனை படைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
டாப் 5இல் ஆதிக்கம் செலுத்தும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்த ஸ்கோர் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் குவிப்பில் முதல் இடத்திலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே உள்ளது.
2024 ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்கு எதிராக எடுத்த 287/3 ஸ்கோர் முதலிடத்தில் உள்ளது.
மேலும், ஐபிஎல்லில் அதிக ரன் குவிப்பில் டாப் 5 இடங்களில் 4 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்வசம் வைத்துள்ளது.
இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை 250+ ஸ்கோர்கள் அடித்த அணிகளில் 3 250+ ஸ்கோர்களுடன் முதலிடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சர்ரெக்ஸ் அணிகளை பின்னுக்குத் தள்ளி 4 250+ ஸ்கோர்களுடன் முதலிடத்தை தனக்கு சொந்தமாக்கி உள்ளது.