அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு!
ஜெர்மனியின் பெர்லினில் ஜூன் 17 முதல் 25 வரை நடைபெறவுள்ள சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 255 பேர் கொண்ட குழு பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பிரிவுகளில் 198 விளையாட்டு வீரர்கள், 57 பயிற்சியாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுகள் அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். பெர்லினில் 190 நாடுகளில் இருந்து மொத்தம் 700 விளையாட்டு வீரர்கள் 26 பிரிவுகளில் போட்டியிடுவார்கள். இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் ஜூன் 12 ஆம் தேதி பெர்லினுக்குப் புறப்படுவதற்கு முன், ஜூன் 7 முதல் 11 வரை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஆயத்த முகாமில் பங்கேற்பார்கள்.
சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு வழியனுப்பு விழா
வியாழன் அன்று (ஜூன் 8) ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சிறப்பு ஒலிம்பிக் பாரத் குழுவினருக்கு சிறப்பு அனுப்பும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் பாடகர் சோனு நிகம் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். முன்னணி சமூக ஆர்வலரும், சிறப்பு ஒலிம்பிக் பாரத் தலைவருமான மல்லிகா நட்டா, இந்த முறை பெர்லினில் இருந்து இந்தியா 150க்கும் மேற்பட்ட பதக்கங்களுடன் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.