INDvsNZ முதல் டெஸ்ட்: 36 ஆண்டுகளில் முதல் முறையாக நியூஸிலாந்திடம் தோற்குமா இந்தியா?
பெங்களூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மாட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ'ரூர்க் முறையே 5 மற்றும் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 356 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ராச்சின் ரவீந்திரா சதமடித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் மீண்ட இந்தியா
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி மீண்டது. ரிஷப் பண்ட் 1 ரன்னில் சதத்தை இழந்து 99 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கான் 150 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் நான்காம் நாளான இன்று (அக்டோபர் 19) 462 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து 107 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கிய நிலையில், 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்டபோது போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி முடிக்கப்பட்டது. இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், நியூசிலாந்து இதில் வெற்றி பெற்றால், இது 36 ஆண்டுகளில் அந்த அணி இந்தியாவில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றியாக இருக்கும்.