இதே நாளில் அன்று : 1983இல் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா
40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், 1983 ஒருநாள் உலகக்கோப்பையில் நடந்த இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து இந்திய அணி தனது முதல் ஒருநாள் உலகக்கோப்பை பட்டத்தை வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கபில்தேவ் தலைமையிலான அணி இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியது. இந்த வெற்றி இந்தியாவை ஒரு கிரிக்கெட் தேசமாக மாற்றியதோடு, ஆசிய அணிகளும் உலகப் பட்டத்தை வெல்லும் திறன் கொண்டவை என்பதை எடுத்துக் காட்டியது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்புள்ள நாடுகளாக பார்க்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தியதோடு, இறுதிப்போட்டியில் வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தியது.
1983 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஸ்கோர் கார்டு
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்ரீகாந்த் (38 ரன்கள்), மொஹிந்தர் அமர்நாத் (26 ரன்கள்) மற்றும் சந்தீப் பாட்டில் (27 ரன்கள்) இந்தியாவை முன்னோக்கி வழிநடத்தினர். எனினும் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 183 என்ற எளிதான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கினாலும், டாப் ஆர்டர் பேட்டிங்கை இந்தியாவின் மதன் லால் சரித்து அதிர்ச்சி கொடுத்தார். அதே போல் அமர்நாத் லோயர் ஆர்டர் பேட்டிங்கை சரித்ததோடு இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 140 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.