சென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்
சென்னை இருங்காட்டுக்கோட்டையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடந்த தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் (NMRC) நடந்த விபத்தில் பைக் பந்தய வீரர் கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரீஷ் உயிரிழந்தார். முன்னதாக, கடந்த மே மாதம் ஸ்பெயினில் நடைபெற்ற இரு சக்கர வாகனப் பந்தயத்தில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை 13 வயது பைக் பந்தய வீரரான ஷ்ரேயாஸ் ஹரீஷ் பெற்றிருந்தார். 'பெங்களூரு கிட்' என்று பிரபலமாக அழைக்கப்படும் ஷ்ரேயாஸ், சனிக்கிழமை 200சிசி மோட்டார் பைக்கில் சவாரி செய்தபோது சறுக்கி விழுந்தார். மேலும், அவரது ஹெல்மெட் பந்தயத்தின் மூன்றாவது சுற்றின் போது கழன்று விட்டது.
பந்தயங்களை ரத்து செய்த மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்
அவரது பின்னால் வந்த மற்றொரு ரைடர், திடீரென விபத்து நடந்ததால் பைக்கை நிறுத்த முடியாமல் ஷ்ரேயாஸ் மீது ஏற்றியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஷ்ரேயாஸ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது. ஷ்ரேயாஸின் மரணத்தைத் தொடர்ந்து, வார இறுதியில் மீதமுள்ள பந்தயங்களை மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ரத்து செய்துள்ளது. ஜூலை 26 அன்று தனது 13வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷ்ரேயாஸ், ஒரு நம்பிக்கைக்குரிய இளம் மோட்டார் பைக் பந்தய வீரராகக் கருதப்பட்டார். அவரது அகால மரணம் பைக் ரேஸ் உலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.