AI தொழில்நுட்பத்தைக் கொண்டு சேவையை மேம்படுத்தும் ஸோமாட்டோ
பெரு நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் பல்வேறு சிறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை தங்களது சேவைகளில் வழங்க முயன்று வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது பல்வேறு பிற துறைகளைச் சார்ந்த நிறுவனங்களும் AI வசதியுடன் கூடிய சேவைகளைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவில் உணவு விநியோக நிறுவனமான ஸோமாட்டோ தங்களது செயலியில் AI வசதிகளுடன் கூடிய சேவை பயனாளர்களுக்கு வழங்குவதற்கான புதிய வசதிகளை உருவாக்கி வருகிறது. ஸோமோட்டாவில் மட்டுமல்லாது, தங்களது கைவசம் உள்ள பிலிங்க்இட்-ன் சேவைகளிலும் AI வசதிகளை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
என்ன விதமான வசதிகள்?
பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும வகையில் தங்கள் தேடுதல் வசதி, நோட்டிபிகேஷன்கள், செயலியில் காட்டப்படும் புகைப்படங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய வசதிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது ஸோமாட்டோ. மேற்கூறிய மாற்றங்கள் பிலிங்க்இட்டில் கொண்டு வரவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. தங்கள் சேவைகளில் AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்ப ஊழியர்களையும் அந்நிறுவனம் பணியமர்த்தியிருக்கிறது. மேலும், AI மேம்பாட்டுப் பிரிவுக்கு புதிய தலைவரையும் அந்நிறுவனம் தற்போது நியமித்திருக்கிறது. வாடிக்கையாளர் தொடர்பில் ஏற்கனவே பெரும்பான்மையான வசதிகளை ஸோமாட்டோ ஆட்டோமேட் செய்திருக்கிறது அந்நிறுவனம். இத்துடன், AI தொழில்நுட்பத்தையும் கொண்டு அந்த வசதிகளை மேம்படுத்துவது, அவை இன்னும் சிறப்பாக தகவல்களையும் கையாளும திறனையும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையையும் வழங்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஸோமாட்டோ.