கூகுளின் 'Chrome'-க்குப் போட்டியாக புதிய இணைய உலாவி 'உலா' - Zohoவின் அறிமுகம்!
கூகுள் க்ரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ் உள்ளிட்ட இணைய உலாவிகள் (Web Browsers) சந்தைப் பங்குக்காக போட்டியிட்டுக் கொண்டிருக்க தங்களுடைய புதிய இணைய உலாவியாக 'உலா'-வை (Ulaa) அறிமுகம் செய்திருக்கிறது இந்திய மென்பொருள் நிறுவனமான ஸோஹோ (Zoho). எந்தவொரு பொருளும் வெளியிடப்படும் போதும் அதற்கென தனித்த ஒரு நோக்கத்தைக் கொண்டே வெளியாகின்றன. அந்த நோக்கம் தேவைப்படும் பயனர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோல, 'உலா'வை வெளியிட்டதற்கான நோக்கமாக ஸோஹோ கூறுவது தனியுரிமை (Privacy) தான். பல இணைய உலாவிகள் இருந்தாலும், இலவசமாக அதனைப் பயன்படுத்துவதற்கு பயனர்களின் தகவல்களைச் சேகரித்து அவற்றை குறிப்பிட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால் பயனர்களின் தனியுரிமையும் பாதிக்கப்படுகிறது. எனவே, தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'உலா'வை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஜோஹோ.
'உலா'வில் என்ன சிறப்பம்சம்?
இந்த உலாவில் டக்டக்கோ (DuckDuckGo) தேடுபொறியையே அடிப்படையான தேடுபொறியாக கட்டமைத்திருக்கிறது ஜோஹோ. இந்தத் தேடுபொறியும் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே. ஆனால், கூகுளோ அல்லது பிங் தேடுபொறியோ வேண்டும் என்பவர்கள் அதற்கேற்ற வகையில் அமைப்புகளில் மாற்றிக் கொள்ளலாம். இந்த உலாவியின் கட்டமைப்பிலேயே விளம்பரங்கள் மற்றும் ட்ராக்கர்களைத் தடுப்பதற்கான பிளாக்கர்களை வழங்கியிருக்கிறது ஸோகோ. நாம் எந்த தேவைக்காக இந்த உலாவியைப் பயன்படுத்துகிறோமோ, அதற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பெர்சனல், வொர்க், கிட்ஸ், டெவலப்பர் மற்றும் ஓபன் செஷன் என ஐந்து மோடுகளை வழங்குகிறது. க்ரோமியம் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உலாவியை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் மற்றும் மேக்ஓஎஸ் என அனைத்து இயங்குதளங்களுக்கு ஏற்பவும் வெளியிட்டிருக்கிறது ஸோகோ.