LOADING...
மாணவர்களை முட்டாளாக்கும் ஏஐ! ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
மாணவர்களின் ஏஐ பயன்பாடு குறித்து ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

மாணவர்களை முட்டாளாக்கும் ஏஐ! ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 04, 2026
07:40 pm

செய்தி முன்னோட்டம்

மாணவர்கள் தங்களின் பாடங்களை படிக்கவும், அசைன்மென்ட்களை எழுதவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது அவர்களின் சுய சிந்தனையை பலவீனப்படுத்தும் என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற யுசி பெர்க்லி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் மாணவர்களின் தோல்வி விகிதம் திடீரென அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி அவர் இந்த விவாதத்தை எழுப்பியுள்ளார். சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற தளங்கள் உடனடிப் பதில்களைக் கொடுத்தாலும், மாணவர்கள் முதலில் தங்களின் அடிப்படைக் கல்வியை வலுவாகக் கற்றுக் கொள்வதே சிறந்தது என்பது அவரது கருத்தாகும்.

ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் பதிவு விபரங்கள்

ஏஐ உங்களை வேகமாக புத்திசாலியாக்கும் ஆனால் அதே வேகத்தில் முட்டாளாகவும் மாற்றும் என ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

"ஏஐ உங்களை மிக வேகமாகப் புத்திசாலியாக்க முடியும், ஆனால் அதே ஏஐ உங்களை மிக வேகமாக முட்டாளாகவும் மாற்றும்" என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாடங்களின் அடிப்படை விதிகளை முறையாகக் கற்றுக்கொள்ளும் வரை, அவர்கள் மத்தியில் ஏஐ தொழில்நுட்பத்தைப் புகுத்துவதை தான் ஆதரிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். ஏஐ கருவிகள் குறுகிய கால செயல்பாட்டை மேம்படுத்தினாலும், மாணவர்களிடம் ஒரு பாடத்தைப் பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்தாமல் அவர்களைத் தன்வசமே முழுமையாகச் சார்ந்திருக்கச் செய்துவிடும் என அவர் சாடியுள்ளார்.

யுசி பெர்க்லி தேர்வு முடிவுகள் அதிர்ச்சி

யுசி பெர்க்லி பல்கலைக்கழக கணினி அறிவியல் தேர்வுகளில் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள மாணவர்களின் தோல்வி விகிதம்

'தி டெய்லி கலிபோர்னியன்' அறிக்கையின்படி, யுசி பெர்க்லி பல்கலைக்கழகத்தில் 2026 ஸ்பிரிங் செமஸ்டர் கணினி அறிவியல் தேர்வுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் பெருமளவில் தோல்வியடைந்துள்ளனர். அதன்படி, சிஎஸ் 10 (CS 10) பாடத்தில் 35.3 சதவீத மாணவர்களும், சிஎஸ் 61ஏ (CS 61A) பாடத்தில் 10.6 சதவீத மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளில் இந்தத் தோல்வி விகிதமானது எப்போதும் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வந்த நிலையில், தற்போதைய இந்த திடீர் உயர்வு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பேராசிரியர்களின் கருத்து மற்றும் முறைகேடுகள்

வீட்டுத் தேர்வு முறைகேடுகள் மற்றும் ஏஐ சாட்பாட்களின் அதீதப் பயன்பாட்டால் சுயமாகச் சிந்திக்கத் திணறும் மாணவர்கள்

இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு மாணவர்கள் ஏஐ கருவிகளைத் தவறான வழிகளில் கல்வி நேர்மை விதிகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்தியதே காரணம் என பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேராசிரியர் டான் கார்சியா தனது வகுப்பில் மட்டும் சுமார் 30 மாணவர்கள் வீட்டிலிருந்து எழுதும் தேர்வுகளில் ஏஐ மூலம் முறைகேடு செய்து சிக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். சாட்பாட்கள் மூலமாகவே அனைத்துப் பயிற்சிகளையும் செய்து பழகிய மாணவர்கள், தேர்வறையில் ஏஐ உதவிகள் இல்லாதபோது சுயமாகச் சிந்தித்து கணக்குகளுக்குத் தீர்வு காண முடியாமல் திணறியதே இந்தத் தோல்விக்குக் காரணமாகும்.

Advertisement