கும்பகோணத்தில் இருந்து உலகிற்கு! Zoho நிறுவனத்தின் புதிய 'Zoho ERP' AI வசதியுடன் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho), இந்தியத் தொழில்துறையினரின் தேவைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'Zoho ERP' என்ற புதிய மென்பொருளை இன்று (ஜனவரி 23, 2026) கும்பகோணத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை SAP, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருள்களை மட்டுமே நம்பியிருந்த இந்திய நிறுவனங்களுக்கு, இது ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று Zoho தெரிவித்துள்ளது. நிதி மேலாண்மை, பில்லிங், சப்ளை செயின், பேரோல் (Payroll) உள்ளிட்ட அனைத்து வணிக தேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
📢 We’re excited to launch @ZohoERP from Kumbakonam, a rural town in Tamil Nadu’s Thanjavur district, to support the needs of India’s fast-growing businesses. 🇮🇳
— Zoho (@Zoho) January 23, 2026
As adoption grows, we plan to replicate the Tenkasi model by expanding our presence in Kumbakonam with a larger… pic.twitter.com/fpFUXJiLyl
AI
செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம்
Zoho ERP-ன் மிக முக்கியமான அம்சம் அதன் உள்ளமைக்கப்பட்ட ஏஐ (AI) தொழில்நுட்பமாகும். இதில் உள்ள 'ஆஸ்க் ஜியா' (Ask Zia) என்ற குரல்வழி உதவி மூலம், தொழிலதிபர்கள் தங்களது வணிக விபரங்களை எளிதில் பெற முடியும். மேலும், ஜிஎஸ்டி (GST) மற்றும் இ-இன்வாய்ஸ் (e-invoicing) விதிமுறைகளுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்திய சட்டதிட்டங்களுக்கு இணங்குவது எளிதாகிறது.
முக்கியத்துவம்
கும்பகோணத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஜோஹோவின் பிராந்திய அலுவலகத்தில் பணிபுரியும் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்புடன் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஜோஹோ நிதிப்பிரிவுத் தலைவர் சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன், "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் கும்பகோணத்து திறமையாளர்களின் பங்கு மிக முக்கியமானது; எங்களது தென்காசி மாடலை இங்கும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளோம்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.