ப்ரீமியம் பயனாளர்களுக்கு 'Playables' வசதியை அறிமுகப்படுத்திய யூடியூப்
யூடியூப் நிறுவனமானது ப்ரீமியம் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் 'பிளேயபில்ஸ்' (Playables) என்ற புதிய கேமிங் வசதியை தங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் புதிய கேம்கள் எதையும் பதிவிறக்கம் செய்யாமல் யூடியூப் செயலியின் உள்ளேயே பயனர்கள் அவற்றை அணுகி விளையாட முடியும். நெட்ஃபிலிக்ஸின் கால்தடத்தைப் பின்பற்றி இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது யூடியூப். விளம்பரமில்லா வீடியோ ஸ்ட்ரீமிங் மட்டுமின்றி, ப்ரீமியம் பயனாளர்களுக்கு தாங்கள் செலுத்தும் தொகைக்கான மதிப்பூக்கூட்டு சேவையாக இதனை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். புதிர் விளையாட்டுக்கள், பந்தைய விளையாட்டுகள் மற்றும் ஆர்கேடு விளையாட்டுக்கள் என 37-க்கும் மேற்கப்பட்ட புதிய கேம்கள் பிளேயபில்ஸ் வசதியின் மூலம் யூடியூப் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
எப்படி இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்துவது?
யூடியூப் தளத்தின் ப்ரீமியம் சந்தாதாரர்கள், அத்தளத்தின் செட்டிங்கஸூக்குச் சென்று புதிய வசதியை அணுக முடியும். அதன் பின்னர் யூடியூபின் மொபைல் செயலி அல்லது வலைத்தளத்தில் பிளேயபில்ஸ் என்ற புதிய பிரிவு ஒன்று தோன்றும். அந்தப் பிரிவில் நாம் விரும்பும் விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுத்து, பதிவிறக்கம் செய்யாமல் உடனடியாக விளையாடிக் கொள்ளலாம். ஆங்கிரி பேர்ட்ஸ் ஷேடவுன், 8 பால் பில்லியர்ட்ஸ் கிளாசிக் மற்றும் டெய்லி சாலிடேர் உள்ளிட்ட நமக்கு மிகவும் பரிச்சயமான பல விளையாட்டுக்களையும் அதில் அளித்திருக்கிறது யூடியூப். ப்ரீமியம் சந்தாதாரர்கள், 2024 மார்ச் 28ம் தேதி வரை இந்த பிளேபில்ஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது யூடியூப். அதன் பின்னர் எப்படி என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.