கொலை மிரட்டல்! அலறும் உலகின் டாப் ஏஐ சிஇஓக்கள்! பல மடங்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தங்களது வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற பொதுமக்களின் அச்சமும் கோபமும், தற்பொழுது உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குக் கொலை மிரட்டல்களும், நேரடித் தாக்குதல் முயற்சிகளும் அதிகரித்து வருவதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு வீச்சு
சாம் ஆல்ட்மேன் வீட்டில் வெடிகுண்டு வீச்சு முயற்சி
கடந்த ஏப்ரல் மாதத்தில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனின் டெக்சாஸ் இல்லத்தில் நபர் ஒருவர் தீவைப்பு மற்றும் வெடிகுண்டு வீச்சு முயற்சியில் ஈடுபட்டார்.
உடனடியாகக் கைது செய்யப்பட்ட அந்த நபரிடமிருந்து போலீஸார் ஒரு முக்கிய அறிக்கையைக் கைப்பற்றினர்.
அதில், ஏஐ நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் அதன் முதலீட்டாளர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற அதிர்ச்சிகரமான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த நபர் மீது தற்பொழுது கொலை முயற்சி மற்றும் அராஜக செயல்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆந்த்ரோபிக்
ஆந்த்ரோபிக் அலுவலகத்திற்குள் புகுந்த மிரட்டல் நபர்
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அலுவலகத்திலும் அண்மைக்காலமாகப் பல பாதுகாப்பு அத்துமீறல்கள் நடந்துள்ளன.
ஏப்ரல் 15 அன்று, பாதுகாப்பு வளையத்தை மீறி அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் ஒரு உறையைக் காட்டி, நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொல்லப்படப் போகிறார் என்றும், அதை எச்சரிக்கவே தான் வந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மற்றொரு சம்பவத்தில், வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள முடியாத விரக்தியில், ஓக்லஹாமாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது பணத்தைத் திருப்பித் தராவிட்டால் துப்பாக்கியுடன் அலுவலகத்திற்கு வரப்போவதாக நேரடியாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
7 மடங்கு அதிகரித்த ஆன்லைன் மற்றும் டார்க் வெப் மிரட்டல்கள்
தொழில்நுட்ப நிறுவனங்களைக் கண்காணிக்கும் லைஃப்ராப்ட் என்ற பாதுகாப்பு உளவு நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் பிப்ரவரி முதல் மே மாத இடைவெளியில் மட்டும் ஏஐ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தரவு மையங்களை இலக்காகக் கொண்டு இணையத்திலும், டார்க் வெப் தளங்களிலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் சுமார் ஏழு மடங்கு அதிகரித்துள்ளன.
இதனால், நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பை 24 மணி நேரமும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கான செலவு
கோடிக்கணக்கில் உயர்த்தப்பட்ட பாதுகாப்புச் செலவினங்கள்
மிரட்டல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான செலவினங்களை மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளன.
பலான்டிர் டெக்னாலஜிஸ்: தனது பாதுகாப்புச் செலவை 150% உயர்த்தி, சுமார் 3 மில்லியன் டாலர்களாக மாற்றியுள்ளது.
ஆரக்கிள்: தனது செலவினங்களை 85.5% உயர்த்தி, 5.6 மில்லியன் டாலர்களை இதற்காக ஒதுக்கியுள்ளது.
சேல்ஸ்ஃபோர்ஸ்: தனது அதிகாரிகளின் பாதுகாப்பிற்காகச் சுமார் 4 மில்லியன் டாலர்களைச் செலவிட்டு வருகிறது.
ஒட்டுமொத்தமாக, எஸ்&பி 500 பட்டியலில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதுகாப்புச் செலவுகளை வெளியிடும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2021இல் 26.8 சதவீதமாக இருந்தது, தற்பொழுது 38.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோபத்தின் பின்னணி
மக்கள் கோபத்தின் பின்னணியில் உள்ள சமூகக் காரணி
குயினிபியாக் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், ஏஐ தொழில்நுட்பம் குறித்து நேர்மறையான எண்ணம் கொண்டவர்களை விட, அதனால் தங்களுக்கு ஆபத்து என்று பயப்படுபவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், 55 சதவீத மக்கள் இந்த தொழில்நுட்பம் நன்மை அளிப்பதை விட சமூகத்திற்குத் தீமையையே அதிகம் செய்கிறது என்று நம்புகின்றனர்.
இது குறித்துப் பேசிய பலான்டிர் சிஇஓ அலெக்ஸ் கார்ப், "உங்களுடைய வேலை முற்றிலும் இல்லாமல் போகப்போகிறது என்று ஒரு சமூகத்திடம் கூறும்போது, மக்கள் ஆயுதங்களை ஏந்தித் தாக்குதலில் இறங்குவது இயல்பான ஒன்றாக மாறிவிடுகிறது." எனத் தற்போதைய சமூகப் பதற்றத்தை விவரித்துள்ளார்.