AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா!
கனடாவைச் சேர்ந்த தனியுரிமை ஒழுங்குமுறை ஆணையங்கள் சேர்ந்து சாட்ஜிபிடியின் தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். தங்கள் நாட்டில் பயனர்களின் தகவல்களை சேகரிக்கவும், அதனைப் பயன்படுத்தவும் பயனர்களிடம் உரிய அனுமதியை ஓபன்ஏஐ நிறுவனம் பெற்றிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கிறது கனடாவின் தனியரிமை ஆணையர் அலுவலகம். தற்போது விசாரணை மேற்கொள்ள மட்டுமே இருக்கிறோம். விசாரணையின் முடிவில் தான் இதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா, அது குறித்து நடவடிக்கைகள் எடுப்போமா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்திருக்கிறது தனியுரிமை ஆனையர் அலுவலகம். AI தொழில்நுட்பக் கருவிகள் உலகம் முழுவதும் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயங்களில் அதிக கவனம் எடுத்து வருகின்றன உலக நாடுகள்.
AI கருவிகள் குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள் கூட்டமைப்பு:
சாட்ஜிபிடியைப் போல ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து வரும் மே 30-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது G7 நாடுகளின் கூட்டமைப்பு. அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பே G7 கூட்டமைப்பு என்றழைக்கப்படுகிறது. தகவல் பாதுகாப்பு, போலியான தகவல்கள் மற்றும் AI தொழில்நுட்பம் எப்படி கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த G7 கூட்டத்தில் விவாதிக்கவிருப்பதாகத் தெரிகிறது. "ஹிரோஷிமா AI ப்ராசஸ்" எனப் பெயரிடப்பட்டு நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்திற்கு ஜப்பான் தலைமை தாங்குகிறது. இந்தக் கூட்டத்தில் விரைவில் AI சட்டங்களை நடைமுறைப்படுத்தவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.