நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்?
2019-ல் தோல்வியடைந்த சந்திராயன்-2வின் தொடர்ச்சியாக நாளை விண்ணில் பாயவிருக்கிறது சந்திராயன்-3. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளுக்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிலவை மையப்படுத்திய தங்களது விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கின்றன. ஆனால், முதலில் நிலவை ஏன் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும், அதிலிருந்து நம்மால் என்ன தெரிந்துகொள்ள முடியும்? பூமியில் உருவாகத் தொடங்கிய பிறகு தற்போது இருக்கும் அளவை அடைவதற்கு முன், செவ்வாய் கிரகத்தின் அளவுடைய துணைக் கோள் ஒன்று பூமியின் மேல் மோதியிருக்கிறது. அந்த மோதலைத் தொடர்ந்து, அப்போதைய பூமியின் சில பகுதிகளும், பூமியின் மேல் மோதிய துணைக் கோளின் சில பகுதிகளும் சேர்ந்து நிலவை உருவாக்கியிருக்கின்றன. இந்த நிகழ்வு நடைபெற்று கிட்டத்தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
தொடக்கக்கால சூரிய குடும்பத்தின் எச்சம், சந்திரன்:
இந்த 4.5 பில்லியன் ஆண்டுகளில் பூமியின் மீது பல்வேறு விண்கற்கள் மோதி, வளிமண்டலம் உருவாகி அதன் பொருட்டு பல்வேறு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது பூமி. ஆனால், நிலவானது இந்த 4.5 ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமின்ற அப்போது எப்படி இருந்ததோ, அப்படியே இப்போதும் இருப்பதாகக் கருதுகின்றனர் விஞ்ஞானிகள். நிலவைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம், அப்போது என்ன விதமான பொருட்கள் மற்றும் துகள்களை கொண்டு நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் உருவாயின் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என நம்புகிறார்கள். அடிப்படையில், சூரிய குடும்பத்தின் தொடக்கக்காலம் எப்படி இருந்தது என்பதன் சாட்சியாக சுற்றி வந்து கொண்டிருக்கிறது நிலவு. இத்துடன், தங்களது தொழில்நுட்ப மேம்பாடுகளை உலகிற்கு பறைசாற்றவும், விண்வெளித் திட்டங்களை உலகநாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.