எலான் மஸ்க் அதிரடி ட்வீட்... ட்விட்டரின் புதிய சிஇஓ யார்?
ட்விட்டரின் செயல்பாடுகளை சரிசெய்துவிட்டு தான் சிஇஓ பதவியில் இருந்து விலகிவிடுவேன் என சில மாதங்களுக்கு முன்பே ஒரு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். தற்போது புதிய சிஇஓ குறித்த அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவாக பதிவிட்டிருக்கிறார் எலான் மஸ்க். அவருடைய பதிவில், ட்விட்டருக்கான புதிய சிஇஓ-வை எலான் மஸ்க் தேர்ந்தெடுத்துவிட்டதாவும், இன்னும் 6 வாரங்களில் பணியை அவர் தொடங்கவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், எலான் மஸ்க் ட்விட்டரின் நிர்வாகத் தலைவரகாவும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகத் தொடரவிருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். புதிய சிஇஓவை தேர்ந்தெடுத்துவிட்டதாக எலான் மஸ்க் பதிவிட்டிருந்தாலும் அது யார் என்று அவர் குறிப்பிடவில்லை. லிண்டா யாக்கரினோ என்பவர் புதிய சிஇஓவாக நியமிக்கப்படலாம் என பிரபல ஆங்கில பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.
யார் இந்த லிண்டா யாக்கரினோ?
அவருடைய லிங்க்டுஇன் பக்கத்தின்படி, 2011-ல் இருந்து NBC யுனிவர்சல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் அவர். அங்கு தற்போது குளோபல் அட்வர்டைஸ்மென்ட் & பார்ட்னட்ஷிப்பின் தலைவராக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் டர்னர் நிறுவனத்தில் 19 வருடங்கள் பணிபுரிந்ததாகவும் , அங்கிருந்து விலகும் முன் அட்வர்டைசிங் சேல்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் அக்விசேஷன் பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் முதன்மை இயக்கு அலுவலராக இருந்ததாவும் குறிப்பிட்டிருக்கிறார். இவரைத் தவிர்த்து ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் பிரிவின் தலைவராகப் பதவி வகித்து வரும் எல்லா இர்வின் என்பவரும் ட்விட்டரின் அடுத்த சிஇஓ-வாக நியமிக்கப்பட்டதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சில ஆங்கில பத்திரிகைகள் குறிப்பிட்டிருக்கின்றன.