செப். 18ல் வெளியாகும் ஆப்பிள் சாதன இயங்குதளங்கள் மற்றும் ஆப்பிளின் பிற அப்டேட்கள்
இந்திய நேரப்படி நேற்று இரவு புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிடும் வொண்டர்லஸ்ட் நிகழ்வை நடத்தி முடித்தது ஆப்பிள். இந்நிகழ்வில் இரண்டு ஸ்மார்ட்வாட்கள் மற்றும் நான்கு ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் உட்பட 6 புதிய சாதனங்களை வெளியிட்டது அந்நிறுவனம். மேற்கூறிய சாதனங்களுடன் சேர்த்து, புதிய ஐபோன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் இயங்குதளங்களையும் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேற்கூறிய ஆறு சாதனங்களைத் தவிர வேறு எந்த தயாரிப்புகளையோ அல்லது மென்பொருட்களையோ அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், புதிய ஐபோன், ஐபேடு மற்றும் ஸ்மார்வாட்ச் இயங்குதளங்களின் வெளியீடு குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
எப்போது வெளியாகின்றன புதிய இயங்குதளங்கள்?
ஐபோனுக்கு ஐஓஎஸ் 17 மற்றும் ஐபேடுக்கு ஐபேடுஓஎஸ் 17 ஆகிய இயங்குதளங்களை கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற WWDC வருடாந்திர நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இதுமட்டுமின்றி, தங்களுடைய மடிக்கணினிகளுக்கான மேக்ஓஎஸ் 10, ஸ்மார்ட்வாட்ச்சுக்கான வாட்ச்ஓஎஸ் 10 மற்றும் ஆப்பிள் டிவிக்கான டிவிஓஎஸ் 17 ஆகிய இயங்குதளங்களையும் WWDC நிகழ்விலேயே அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். தற்போது, மேற்கூறிய ஐபோன் மற்றும் ஐபேடுக்கான இயங்குதளங்களை செப்டம்பர் 18ம் தேதி முதல் ஆப்பிள் பயனர்கள் தங்களுடைய சாதனங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். ஐபோனுக்கான ஐஓஎஸ் 17 இயங்குதளமானது தற்போதே சோதனைக்கான பீட்டா பயனாளர்களுக்கு வெளியாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக டைப்-சி கேபிளை வழங்கியிருக்கும் ஆப்பிள்:
பிற ஸ்மார்ட்போன்களில் இருந்து தனித்துத் தெரியும் வகையில், சார்ஜிங் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு லைட்னிங் கேபிளை வழங்கி வந்தது ஆப்பிள் நிறுவனம். ஆனால், முதல் முறையாக ஐபோன் 15 சீரிஸில் டைப்-சி கேபிளைக் கொண்டு சார்ஜிங் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யும் வகையிலான டைப்-சி போர்ட்டை வழங்கியிருக்கிறது ஆப்பிள். ஐபோன் மட்டுமின்றி, ஸ்மார்ட்வாட்ச்கள், ஏர்பாட்ஸ்கள் என அனைத்தையும் டைப்-சி கேபிளைக் கொண்டு சார்ஜ் செய்யும் வகையில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள். அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே வகையான சார்ஜிங் கேபிள் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 11,000 எலெக்ட்ரானிக் குப்பைகளை குறைக்க முடியும் (ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும்) என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
NavIC வசதியுடன் வெளியான முதல் ஐபோன்:
GPS-க்கு மாற்றாக இந்தியாவிற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட NavIC தொழில்நுட்பத்தைக் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வருகிறது இந்தியா. இஸ்ரோவின் NavIC சாட்டிலைட்களைக் கொண்டு இந்தத் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிற்குள் போக்குவரத்து முதல் அறிவியல் ஆராய்ச்சி வரை பல்வேறு செயல்பாடுகளுக்கும் GPS-க்கு மாற்றாக இந்த NavIC தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒன்பிளஸ் நார்டு 2T, Mi 11X, 11T ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் NavIC தொழில்நுட்ப பயன்பாட்டு வசதியுடன் வெளியாகியிருக்கின்றன. அந்த வரிசையில், தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸின் ப்ரோ மாடல்களான ஐபோன் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் NacIC தொழில்நுட்ப பயன்பாட்டு வசதியை அளித்திருக்கிறது ஆப்பிள்.