பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராமைப் போல பயனாளர் பெயரைக் கொண்டு குறுஞ்செய்திப் பகிர்வை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியை தற்போது பீட்டா சோதனையாளர்கள் மூலம் சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப். 23.20.1.71 என்ற வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இந்தப் புதிய வசதி சோதனைக்கா வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வசதியைக் கொண்டு, புதிய நபர்களுடன் நம்முடைய தொடர்பு எண்ணைப் பகிராமல் பயனாளர் பெயரைக் கொண்டே குறுஞ்செய்தி மற்றும் தகவல் பகிர்வை மேற்கொள்ள முடியும். அதாவது, தற்போது டெலிகிராமில் இருப்பதைப் போலான ஒரு வசதி தான். ஆனால், இன்ஸ்டாகிராமில் கொண்டிருப்பதைப் போல ஒருவர் பயன்படுத்திய பயனாளர் பெயரை மற்றொருவர் பயன்படுத்த முடியாத வகையில் புதிய வசதியை உருவாக்கியிருக்கிறது வாட்ஸ்அப்.
எப்போது வெளியீடு?
இந்த வசதி அனைத்துப் பயனாளர்களுக்கும் வெளியான பிறகு, நம்முடைய வாட்ஸ்அப் செயலியின் உள்ளேயே நமக்குப் பிடித்தமான பயனாளர் பெயரை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நமக்கு முன்பின் தெரியாத புதிய நபர்களுடன் உரையாடலைத் தொடங்கும் போது நம்முடைய பயனாளர் பெயர் மட்டுமே தெரியும் வகையில் அமைப்புகளில் மாற்றம் செய்து குறுஞ்செய்திகளைப் பகிர முடியும். மேலும், தற்போது வழங்கப்படுவது போல எண்டு-டூ-எண்டு பாதுகாப்பு வசதி, புதிய பயனாளர் பெயரைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சாட்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப். வரும் மாதங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களுக்குமான வாட்ஸ்அப் அப்டேட்களிலும் இந்தப் புதிய வசதியை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.