4 புதிய அம்சங்கள் அறிமுகம்! இனி போன் இல்லாமலேயே வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனத்தின் முன்னணித் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஐபேட், ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் டெஸ்க்டாப் செயலிகளில் பல்வேறு புதிய வசதிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபேட்களுக்கான நேரடி கணக்கு உருவாக்கம், கார் ஓட்டும்போது எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஆப்பிள் கார்பிளே மேம்பாடு, பிடிஎஃப் கோப்புகளை நேரடியாக எடிட் செய்யும் வசதி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இசையைப் பகிரும் புதிய முறை என பல முக்கிய மாற்றங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
போன் தேவையில்லை
இனி போன் இல்லாமல் ஐபேடில் தனியாக வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்
இதுவரை ஐபேட் பயனர்கள் தங்களது முதன்மை ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் கணக்கை இணைப்பாகக் கொண்டு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது.
ஆனால் தற்பொழுது வெளியாகியுள்ள புதிய அப்டேட் மூலம், முதன்மை போனின் உதவியோ இணைப்போ இன்றி பயனர்கள் நேரடியாகத் தங்களது ஐபேடிலேயே புதிய வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கிப் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் ஐபேட் ஒரு தனித்துவமான முதன்மை சாதனமாக செயல்படும் வசதியைப் பெறுகிறது.
ஸ்டேட்டஸ் அப்டேட்
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்களைப் பகிர்வது இனி மிகவும் எளிது
வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்வதற்கான வசதி மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
இனிமேல் பாடலின் விவரங்களைத் தட்டச்சு செய்யவோ அல்லது லிங்குகளை நகல் எடுக்கவோ தேவையில்லை.
ஆப்பிள் மியூசிக் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற முன்னணி மியூசிக் செயலிகளில் உள்ள ஷேர் விருப்பத்தைப் பயன்படுத்தி, நேரடியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸுக்கு பாடல்களைப் பகிர முடியும்.
ஆண்ட்ராய்டு ஆட்டோ
ஓட்டுநர்களுக்காக ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மேம்பாடு
வாகனம் ஓட்டும்போது இடையூறின்றி வாட்ஸ்அப் பயன்படுத்தும் வகையில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அமைப்புகளில் புதிய வடிவமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகனத்தின் தொடுதிரை அல்லது குரல் வழிகாட்டுதல் மூலம் உள்வரும் செய்திகளைக் கேட்பது, பதிலளிப்பது, வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்வது, அழைப்பு வரலாற்றைப் பார்ப்பது மற்றும் முக்கிய தொடர்பாளர்களைத் தொடர்புகொள்வது போன்ற பணிகளை கைகளைக் பயன்படுத்தாமல் எளிதாக செய்ய முடியும்.
பிடிஎஃப் எடிட் வசதி
சாட்டிற்குள்ளேயே பிடிஎஃப் பார்த்து எடிட் செய்யும் புதிய வசதி
உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் அடோப் அக்ரோபேட் நிறுவனத்துடன் இணைந்து புதிய பிடிஎஃப் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி பயனர் சாட்டில் வரும் பிடிஎஃப் கோப்புகளைத் தனி செயலி வழியே பதிவிறக்கம் செய்யாமல் நேரடி விண்டோவிலேயே திறந்து பார்க்க முடியும்.
மேலும், அதில் உள்ள உரைகளை ஹைலைட் செய்யவும் மற்றும் குறிப்புகளைச் சேர்க்கவும் முடியும்.
இந்த பிடிஎஃப் எடிட்டிங் வசதி தற்பொழுது வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளில் வழங்கப்பட்டு வருகிறது.