செப் 12 ஆப்பிளின் வொண்டர்லஸ்ட் நிகழ்வு, என்னென்ன அறிமுகங்கள்?
செய்தி முன்னோட்டம்
இந்தாண்டு தங்களது புதிய ஐபோன் சீரிஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை வெளியிடும் நிகழ்விற்கு வொண்டர்லஸ்ட் எனப் பெயர் வைத்திருக்கிறது ஆப்பிள். இந்த நிகழ்வை வரும் செப்டம்பர் 12ம் தேதி நடத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த நிகழ்வில் தங்களுடைய புதிய வாட்ச் சீரிஸ் 9 ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிடவிருக்கிறது ஆப்பிள். இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை முந்தைய ஸ்மார்ட்வாட்ச் சீரிஸில் இருந்து பல்வேறு வகையில் மேம்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.
மேம்படுத்தப்பட்ட இதயத் துடிப்பு சென்சாரை புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் அந்நிறுவனம் கொடுத்திருக்கும் நிலையில், புதிய U2 சிப்பையும் வாட்ச் சீரிஸ் 9ல் ஆப்பிள் பயன்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால், இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சீரிஸின் டிசைன் மற்றும் வடிவமைப்பு முந்தைய ஸ்மார்ட்வாட்ச்களின் வடிவமைப்பு ஒத்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள்
டைப்-சி சார்ஜிங் போர்ட்டைப் பெறும் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்:
ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வின் முக்கிய அம்சம் ஆப்பிளின் ஐபோன் 15 சீரிஸ் தான். முந்தைய ஐபோன்களைப் போல இல்லாமல் பெரிய மாற்றம் ஒன்று இந்த ஐபோந் 15 சீரிஸில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
புதிய 15 சீரிஸ் ஐபோன்களில், ஆப்பிள் வழக்கமாகப் பயன்படுத்தும் லைட்னிங் சார்ஜிங் போர்ட் இல்லாமல், டைப்-சி சார்ஜிங் போர்ட்டை பயன்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
15 சீரிஸின் கீழ் வெளியாகவிருக்கும் நான்கு ஐபோன் மாடல்களிலும் டைப்-சி போர்ட்டே கொடுக்கப்பட்டிருந்தாலும், அதிகவேக டேட்டா பரிவர்த்தனை வசதியுடன் கூடிய போர்ட்டை, 15 சீரிஸின் ப்ரீமியம் வெர்ஷன்களான ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸில் மட்டுமே அந்நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவைதவிர, ஐஓஎஸ் 17 மற்றும் வாட்ச்ஓஎஸ் 10 ஆகிய இயங்குதளங்களையும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஆப்பிள்.