பயன்பாட்டில் இருக்கும் மோசமான கடவுச்சொற்களின் பட்டியலை வெளியிட்ட நார்டுபாஸ் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
நம்முடைய அனைத்து சேவைகளும், தேவைகளும் இணைய மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், நம்முடைய டிஜிட்டல் இருப்பைக் காக்கும் பொறுப்பு கடவுச்சொற்களையே (Password) சேர்கிறது.
ஆனால், நம்மில் பெரும்பாலானோர் போதிய பாதுகாப்பு அளிக்கும் கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதில்லை. மேலும் பலரோ எளிதில் கணிக்கக்கூடிய வகையிலான கடவுச்சொற்களையும், ஒரே கடவுச்சொல்லோயே தங்களுடைய பல இணையக் கணக்குகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
எவ்வளவுக்கெவ்வளவு கடினமான கடவுச்சொற்களை நம்முடைய கணக்குகளுக்குப் பயன்படுத்துகிறோமோ, அந்தளவிற்கு நம்முடைய கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும்.
இந்நிலையிவ், தற்போது பல லட்சம் பயனாளர்களால் பயன்படுத்தப்படும் மோசமான (எளிதில் கணிக்கக்கூடிய வகையிலான) கடவுச்சொற்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது நார்டுபாஸ் (NordPass) நிறுவனம்.
கடவுச்சொல்
மோசமான கடவுச்சொற்கள்:
'123456' என்ற கடவுச்சொல்லே மிக மோசமான கடவுச்சொல்லாகவும், அதிக இணைய பயனாளர்களால் பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது நார்டுபாஸ்.
கடவுச்சொற்களைப் பயன்பாட்டில், ஐந்தில் நான்கு முறை மேற்கூறிய இந்த எளிதான கடவுச்சொல்லே பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது நார்டுபாஸ்.
இதனைத் தொடர்ந்து, admin, 12345678, 123456789, 1234, 12345, password, 123, Aa123456, 12345678901 உள்ளிட்டவை மிகவும் மோசமான கடவுச்சொற்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கின்றன.
இவற்றைத் தவிர, 000000, UNKNOWN, user, 1111, root மற்றும் qwerty உள்ளிட்ட கடவுச்சொற்களும் மோசமான கடவுச்சொற்கள் வரிசையில் இடம்பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது நார்டுபாஸ் நிறுவனம்.
தொழில்நுட்பம்
பலமான கடவுச்சொல்லை அமைப்பது எப்படி?
ஒரு இணையக் கணக்கு அனுமதிக்கும் பட்சத்தில், 20 எழுத்துக்கள் வரை கொண்ட கடவுச்சொற்களை அமைக்கலாம்.
நாம் அமைக்கும் கடவுச்சொல்லில், ஆங்கில எழுத்தின் கேபிட்டல் மற்றும் சிறிய எழுத்துக்களின் கலவை இருப்பதை உறுதி செய்யவும்.
அத்துடன், எழுத்துக்கள் மட்டுமின்றி எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகளையும் நம்முடைய கடவுச்சொல்லில் இணைப்பது சிறப்பு.
நமக்கு நெருங்கியவர்கள் எளிதாகக் கண்டறியும் வகையில், பிறந்த தேதிக்கள், முக்கியமான நாட்கள், நமக்கு விருப்பான நபர்கள் மற்றும் விருப்பான விஷயங்களை கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நலம்.
மேலும், ஒரே கடவுச்சொல்லை பல கணக்குகளுக்குப் பயன்படுத்தாமல், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடவுச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இறுதியாக, அவ்வப்போது நம்முடைய கடவுச்சொற்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.