விலங்குகளிடையே தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கொரோனாவுக்கு காரணமான சார்ஸ் கோவ்-2 (SARS-CoV-2) வைரஸ், இப்போது வனவிலங்குகளிடையே பரவலாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புனர்வாழ்வு மையங்களில் உள்ள விலங்குகள் அல்லது காட்டில் வழிதவறி சிக்கி மீண்டும் காட்டுக்குள் விடப்பட்ட கிட்டத்தட்ட 800 விலங்குகளில் நாசி மற்றும் வாய்வழி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இது தெரிய வந்துள்ளது. வர்ஜீனியா டெக் பாதுகாப்பு உயிரியலாளர் அமண்டா கோல்ட்பர்க் கூறுகையில், "வைரஸ் எங்கும் பரவியுள்ளது என்பதே பெரிய டேக்-ஹோம் செய்தி என்று நான் நினைக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார். சில உயிரினங்களில் 60% வரை அதிக வெளிப்பாடு விகிதங்களை ஆய்வு கண்டறிந்துள்ளது. முந்தைய கொரோனா நோய்த்தொற்றைக் குறிக்கும் ஆன்டிபாடிகளுடன் ஆறு வெவ்வேறு வகைகள் இதில் கண்டறியப்பட்டன.
வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை
கிழக்கு காட்டன் டெயில் முயல்கள், ரக்கூன்கள், கிழக்கு மான் எலிகள், வர்ஜீனியா ஓபோசம்ஸ், கிரவுண்ட்ஹாக்ஸ் மற்றும் கிழக்கு சிவப்பு வெளவால்கள் ஆகியவற்றில் இந்த வைரஸ் மாறுபாடுகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இனங்களில் பெரும்பாலானவை வட அமெரிக்கா முழுவதும் வாழ்வதால் கொரோனா வனவிலங்குகளிடையே அதிகம் பரவி வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். வனவிலங்குகளில் கொரோனா வைரஸ் பரவலாக இருந்தாலும், இந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான எந்த ஆதாரமும் ஆய்வில் கண்டறியப்படவில்லை. விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கு பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு சாத்தியமான சில்வாடிக் சுழற்சிக்கு காரணமாக அமையலாம் என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்தனர். வைரஸ் காட்டு விலங்குகளில் தன்னைத் தக்கவைத்துக்கொண்டு, மனிதர்களை மீண்டும் தாக்கும் வகையில் புதிய பிறழ்வுகளுக்கு வித்திடலாமென அஞ்சப்படுகிறது.