LOADING...
க்ளாட் ஃபேபிள் 5 மற்றும் மைத்தோஸ் 5 மாடல்களை உலகளவில் திடீரென முடக்கியது ஆந்த்ரோபிக் நிறுவனம்: பின்னணி என்ன?
ஆந்த்ரோபிக் க்ளாட் ஃபேபிள் 5 முடக்கம்

க்ளாட் ஃபேபிள் 5 மற்றும் மைத்தோஸ் 5 மாடல்களை உலகளவில் திடீரென முடக்கியது ஆந்த்ரோபிக் நிறுவனம்: பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 13, 2026
11:25 am

செய்தி முன்னோட்டம்

முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சி நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது மிக அதிநவீன ஏஐ மாடல்களான க்ளாட் ஃபேபிள் 5 (Claude Fable 5) மற்றும் மைத்தோஸ் 5 (Mythos 5) ஆகியவற்றை உலகளவில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் உடனடியாக முடக்குவதாக வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இரவு அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசு திடீரென ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் தடை விதித்ததே இதற்குக் காரணமாகும். பாதுகாப்பு நெறிமுறைகளின்படி வெளிநாட்டுப் பயனர்களை மட்டும் தனியாகப் பிரித்து முடக்குவது சாத்தியமற்றது என்பதால், ஆந்த்ரோபிக் க்ளாட் ஃபேபிள் 5 மற்றும் மைத்தோஸ் மாடல்களுக்கான ஒட்டுமொத்தப் பொது அணுகலையும் நிறுவனம் தற்காலிகமாக முழுமையாக நிறுத்தியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஜெயில்பிரேக் விவாதமும்

அமெரிக்க வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அவசர உத்தரவில், குறிப்பிட்ட ஏஐ மாடல்களின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து, மென்பொருட்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறியும் சைபர் தாக்குதல்களுக்கு இதனைப் பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கி மற்றும் நிதித் துறைகளின் பழைய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அதிநவீன சைபர் தாக்குதல்களை நடத்த இந்த மைத்தோஸ் ரக மாடல்கள் உதவக்கூடும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனினும், அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ள ஜெயில்பிரேக் வழிமுறையானது மிகவும் சிறிய அளவிலான குறைபாடுகளை மட்டுமே கண்டறியும் திறன் கொண்டது என்றும், சந்தையில் உள்ள பிற பொதுவான ஏஐ மாடல்களும் இதே போன்ற திறன்களைக் கொண்டுள்ளன என்றும் ஆந்த்ரோபிக் நிறுவனம் தன் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

மோதல் போக்கு

அமெரிக்க ராணுவத்துடனான முந்தைய மோதல்களின் பின்னணி

அமெரிக்க அரசாங்கத்திற்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான இராஜதந்திரப் போர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் உள்நாட்டு உளவுப் பணிகள் மற்றும் முழுமையான சுயாட்சி கொண்ட நவீன ஆயுத அமைப்புகளில் (Autonomous Weapons) தங்களின் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அமெரிக்க ராணுவத்திற்கு இந்நிறுவனம் திட்டவட்டமாக அனுமதி மறுத்திருந்தது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஆந்த்ரோபிக் நிறுவனத்தை அமெரிக்க அரசு தனது விநியோகச் சங்கிலி கறுப்புப் பட்டியலில் (Supply Chain Blacklist) சேர்த்தது. இத்தகைய பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும், இந்நிறுவனம் அடுத்த சில மாதங்களில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் மாபெரும் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுப் பணிகளை மேற்கொண்டு வந்த வேளையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எதிர்காலத் திட்டம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான பாதிப்பும் எதிர்காலத் திட்டமும்

இந்த புதிய ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, அமெரிக்காவில் வசித்தாலும் அமெரிக்கக் குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் எவரும் இந்த மாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதால், ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு வம்சாவளி ஆராய்ச்சியாளர்களுக்கே தற்பொழுது இந்த ஏஐ மாடல்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தடையானது தற்காலிகமானது என்றும், அரசாங்கத்துடன் நிலவும் புரிதல் குறைபாடுகளைச் சீரமைத்து, முறையான பாதுகாப்பு சரிபார்ப்புகளுக்குப் பின்னர் இந்த மாடல்களை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் தீவிரமாக உழைத்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவரை பயனர்கள் தடையின்றிப் பயன்படுத்தும் வகையில், நிறுவனத்தின் முந்தைய க்ளாட் ஓபஸ் 4.8 உள்ளிட்ட பிற ஏஐ மாடல்களின் சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement