பொதுப்பயனர்களுக்கு வெளியாகி 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் ட்விட்டர்
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வருகிறது ட்விட்டர். இதற்குக் காரணம் எலான் மஸ்க் அந்நிறுவனத்தை வாங்கியது தான். கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அத்தளத்தில் பல்வேறு புதிய மாற்றங்களைக் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுவே அந்நிறுவனம் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடிப்பதற்கான காரணமாகவும் இருக்கிறது. 2006-ல் இதே ஜூலை 15-ம் தேதி தான் பொதுப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ட்விட்டர். இன்றைய தேதியுடன் வெளியிடப்பட்டு 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது அந்த சமூக வலைத்தளம். 2006-ல் மார்ச் மாதத்திலேயே ட்விட்டரில் தனது முதல் ட்வீட்டைப் பதிவு செய்திருக்கிறார் அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டார்ஸே. ஆனால், ஜூலையில் தான் அனைவரது பயன்பாட்டிற்கும் வருகிறது ட்விட்டர்.
எப்படி உருவானது ட்விட்டர்?
2004-ல் பிஸ் ஸ்டோன், ஈவன் வில்லியம்ஸ் மற்றும் நோவா கிளாஸ் ஆகிய மூவரும் இணைந்து ஓடியோ (Odeo) என்ற பாட்காஸ்டிங் தளம் ஒன்றை உருவாக்குகிறார்கள். 2005-ல் தங்களது ஐ-ட்யூன்ஸ் சேவைகள் பாட்காஸ்ட் வசதியை அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவிக்கிறது ஆப்பிள். ஆப்பிளுடன் போட்டியிட புதிய செயலி ஒன்றை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது இந்த மூவர் குழு. அப்போது அவர்களிடன் ஓடியோ நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்த ஜாக் டார்ஸே குறுஞ்செய்தி வடிவிலான சமூக வலைத்தளம் குறித்த யோசனை ஒன்றைக் கூறுகிறார். இதனைத் தொடர்ந்தே ட்விட்டரை உருவாக்குகிறார் ஜாக் டார்ஸே.2006-ல் ட்விட்டர் வலைத்தளம் வெளியிடப்பட்டு, 2007-ல் ட்விட்டர் நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் சிஇஓ-வாக நியமிக்கப்படுகிறார் ஜாக்.