இனி குறுஞ்செய்திகளும் அனுப்பமுடியாது, ட்விட்டரின் புதிய நடவடிக்கை
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ட்விட்டரை கையகப்படுத்தினார் எலான் மஸ்க். ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு, அந்நிறுவனத்தில் பல்வேறு புதிய மாற்றங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் எலான் மஸ்க். ட்விட்டரில் எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் மாற்றங்கள் அனைத்தும், அந்நிறுவனத்தின் வருவாயைப் பெருக்குவதை மையப்படுத்தியே இருக்கின்றன. ட்விட்டரைக் கையகப்படுத்திய பிறகு, அந்நிறுவனத்தின் செலவைக் குறைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட எலான், தற்போது வருவாய்ப் பெருக்வதற்கும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டர் தளத்தில் முன்னர் இலவசமாக வழங்கப்பட்டு வந்த பல்வேறு வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக, அத்தளத்தின் சந்தா சேவையான ட்விட்டர் ப்ளூவுக்குள் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எலான் மஸ்க்.
ட்விட்டரின் புதிய நடவடிக்கை:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவுகளை பார்ப்பதற்கு வரம்புகளை நிர்ணயித்த எலான் மஸ்க், தற்போது அத்தளத்தில் பிற பயனர்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளிலும் புதிய வரம்புகளைக் கொண்டு வந்திருக்கிறார். சந்தா செய்யாத பயனர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளின் அளவுக்கு புதிய வரம்புகளை விதிக்கவிருக்கிறது ட்விட்டர். எந்த அளவிற்கு என்பது குறித்த தகவல்களை அத்தளம் இன்னும் அறிவிக்கவில்லை. ட்விட்டர் தளத்தில் அதிகரித்து வரும் ஸ்பேம் குறுஞ்செய்திகளைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என எலான் மஸ்க் கூறியிருந்தாலும், ட்விட்டர் ப்ளூ சந்தா சேவையை பயனர்களிடம் திணிக்கவே இந்த மாதிரியான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.