மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்?
வருவாயை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக ப்ளூ செக்மார்க் வசதியை கட்டண சேவையாக மாற்றினார் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க். இதனைத் தொடர்ந்து கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் இருந்து கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ப்ளூ செக்மார்க் நீக்கப்பட்டது. உலகின் பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என கட்டணம் செலுத்தாதவர்கள் கணக்கில் இருந்து ட்விட்டர் நிறுவனம் ப்ளூ செக்மார்க்கை நீக்கியது. இது குறித்து சில பிரபலங்கள் அதிருப்தி தெரிவிக்க, லெப்ரான் ஜேம்ஸ், வில்லியம் ஷாட்னர் மற்றும் ஸ்டீபன் கிங் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளுக்கு மட்டும் தானே கட்டணம் செலுத்தி ப்ளூ செக்மார்க்கை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க்.
மீண்டும் வந்த ப்ளூ செக்மார்க்:
ட்விட்டரின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பல பிரபலங்கள், கட்டணம் செலுத்தி தான் ப்ளூ செக்மார்க்கைப் பெற வேண்டும் என்றால், அது தங்களுக்கு வேண்டாம், எனக் கூறியிருந்தனர். தற்போது இதில் புதிய திருப்பமாக 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்களுக்கு மேல் கொண்ட கணக்குகளுக்கு மட்டும் ப்ளூ செக்மார்க்கை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் ஷாரூக் கான், எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் கணக்குகளில் மீண்டும் ப்ளூ செக்மார்க் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இது திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அவர்கள் கட்டணம் செலுத்தியிருக்கிறார்களா என சரிபார்க்க முடியாது. ஏனெனில், எந்த ப்ளூ செக்மார்க்கின் மீது கிளிக் செய்தாலும், அவர்கள் கட்டணம் செலுத்தி பெற்றதாவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.