எக்ஸ் ப்ரீமியம் கட்டண சேவைக்குள் கொண்டு செல்லப்படும் ட்வீட்டெக் வசதி
ட்விட்டரின் பெயரை எக்ஸ் (X) என மாற்றிய பிறகு, அந்நிறுவனம் வழங்கி வந்த ட்வீட்டெக் வசதியின் பெயரை எக்ஸ் ப்ரோ (X Pro) என மாற்றினார் எலான் மஸ்க். இந்த எக்ஸ் ப்ரோவை அடுத்த 30 நாட்களில் கட்டண சேவையின் கீழ் கொண்டு வரவிருப்பதாகவும் கடந்த மாதம், ஜூலை 3-ம் தேதி அறிவித்திருந்தது எக்ஸ். எக்ஸின் பல்வேறு இலவச வசதிகளை, அதன் கட்டண சேவையான எக்ஸ் ப்ரீமியமுக்குகள் (X Premium) கொண்டு சென்றார் எலான் மஸ்க். எக்ஸ் ப்ரீமியம் கட்டண சேவையின் சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், எக்ஸின் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் அவர்.
கட்டண சேவையாகும் எக்ஸ் ப்ரோ:
பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து, தற்போது எக்ஸ் ப்ரோவையும் கட்டண சேவைக்குள் கொண்டு செல்லவிருக்கிறது எக்ஸ் தளம். சில பயனர்கள் எக்ஸ் ப்ரோவைரப் பயன்படுத்திய போது, எக்ஸ் ப்ரீமியம் சேவைக்கு சந்தா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. விரைவில், அனைத்து பயனர்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ் ப்ரீமியம் சேவைக்கு சந்தா செய்வதன் மூலம், எக்ஸ் ப்ரோ உட்பட ட்விட்டரின் பல்வேறு வசதிகளையும் நம்மால் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு மாதம் ரூ.900 எக்ஸ் ப்ரீமியம் கட்டணமாகவும், வெப் பயனர்களுக்கு மாதம் ரூ.650 எக்ஸ் ப்ரீமியம் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.