இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!
நேற்றிரவு இந்த ஆண்டின் முதல் விண்வெளி நிகழ்வான 'Super Moon'-ஐ அனைவரும் கண்டுகளித்திருப்பீர்கள். அதேபோல், இந்த மாதம் வேறு என்னென்ன விண்வெளி நிகழ்வுகளைக் காண முடியும் என்று பார்க்கலாமா? நமது சூரிய குடும்பம் இடம்பெற்றிருக்கும் பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியை இந்த மாதம் முழுவதும் இரவு நேரங்களில் காண முடியும். வெளிச்சமற்ற இருள் நேரத்தில் தெற்கு வானத்தில் இந்த அரிய காட்சியை நம்மால் காண முடியும். ஆனால், வெளிச்சமற்ற இருளடர்ந்த இடங்களில் இருந்து பார்த்தால் மட்டுமே இந்தக் காட்சியை நம்மால் காண முடியும். இந்த ஜூலை மாதத்தின் அனைத்து நாட்களிலும், சூரியன் மறைந்த பிறகு செவ்வாய் மற்றும் வீனஸ் கோள்களை மேற்கு அடிவானத்தில் நம்மால் பார்க்க முடியும்.
வேறு என்ன விண்வெளி நிகழ்வுகளைக் காண முடியும்?
வியாழன் மற்றும் சனி கோள்களையும் இந்த ஜூலை முழுவதும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நம்மால் பார்க்க முடியும். ஜூலை-11ம் நாள் சூரிய உதயத்திற்கு முன்னாள் பிறை நிலவுக்கு சற்று கீழே வியாழனைப் பார்க்கலாம். அதோபோல், ஜூலை-20ம் நாளில் வீனஸ், செவ்வாய் மற்றும் பிறை நிலவு ஆகிய மூன்றையும் ஒருசேர நம்மால் காண முடியும். அன்றைய நாளில் சூரிய மறைந்த சிறிது நேரத்தில் மேற்கு வானத்தில் பிறை நிலவும், செவ்வாயும் ஒரு சேரக் காட்சியளிக்க, அதற்கு சற்று கீழே வீனஸ் கோளும் இடம்பெற்றிருக்கும். இம்மாதத்தின் அமாவாசை நாள் ஜூலை-18ல் வருகிறது. நிலவின் வெளிச்சமற்ற அன்றைய நாளே பால்வெளி மண்டலத்தையும், பிற கோள்கள் மற்றும் நட்சத்திரங்களையும் பார்த்து ரசிக்க சிறந்த நாளாக இருக்கும்.