AI தொழில்நுட்பத்தையும் முதன்மையான அச்சுறுத்தலாகக் கருத வேண்டும்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்டான சாட்ஜிபிடி-யை வெளியிட்டது ஓபன்ஏஐ நிறுவனம். அதனைத் தொடர்ந்து கடந்த ஏழு மாதங்களில் பல்வேறு நிறுவனங்கள் AI போட்டியில் நுழைந்துவிட்டன். உலகம் முழுவதும் AI தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு கருவிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டிருக்கின்றன. குறைந்த காலத்திலேயே மக்களிடம் அதீத வரவேற்பைப் பெற்றிருக்கும் AI-க்கள் வருங்காலத்திற்கு மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக இருக்கும் என எலான் மஸ்க் உட்பட உலகின் பல முக்கிய நபர்கள் பேசி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து AI ஆராய்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என வெளிப்படையான அறிக்கையில் எலான் மஸ்க் உட்பட பலரும் கையெழுத்திட்டு இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
புதிய கையெழுத்து முயற்சி:
இதனைத் தொடர்ந்து தற்போது AI குறித்த ஆபத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என புதிய ஒற்றை வாக்கிய வெளிப்படை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. AI சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், AI நிறுவனங்களின் நிறுவனர்கள் என அனைவரும் அந்த அறிக்கைக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கையெழுத்திட்டு வருகிறார்கள். நோய்ப் பரவல் மற்றும் அணு ஆயதப் போரைப் போல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. எனவே, அவற்றையும் முதன்மையான அச்சுறுத்தலாகக் கருத வேண்டும், என அந்த ஒற்றை வாக்கிய வெளிப்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு ஆதரவாக ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆட்மேன் உட்பட 350 முக்கிய நபர்கள் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.