நிலவின் நேரம் வேகமாக ஓட தொடங்கியுள்ளதாக தகவல்: ஏன் இது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது?
நாசா விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சியின் படி, நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓட தொடங்கியுள்ளது. நிலவின் நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக ஓட தொடங்கியுள்ளது என்று அந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், 52 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி வீரர்கள் கடைசியாக சந்திரனில் கால் பதித்தனர். அப்போதிருந்த நேரத்துடன் ஒப்பிடும்போது நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக பார்க்கும் போது, இது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், பூமி மற்றும் சந்திரனின் நேரம் சரியாக இருந்தால் தான், நேவிகேஷன் அமைப்புகள் போன்ற செயற்கைகோள்கள் துல்லியமாக செயல்படும்.
சந்திரனின் நேரத்தை துல்லியமாக கணிக்க நாசா முடிவு
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை மீண்டும் சந்திரனுக்குத் அனுப்பும் நோக்கில் ஆர்ட்டெமிஸ் பணிகளுக்கு நாசா தயாராகி வருகிறது. எனவே, இந்த நேர வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதும் நிர்வகிப்பதும் மிக மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆர்ட்டெமிஸ் பயணத்திற்கு முன்பு சந்திரனின் நேரத்தை துல்லியமாக கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது. சந்திரனை சுற்றி வரும் செயற்கை கோள்களில் அணு கடிகாரங்களை பொருத்துவதன் மூலம் நிலவின் நேரத்தை சரியாக கணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணத்தின் போது நிலவின் தரையில் அணு கடிகாரத்தை பொருத்தவும் நாசா திட்டமிட்டு வருகிறது. அணு கடிகாரம் என்பது சீசியம் அல்லது ரூபிடியம் போன்ற அணுக்களின் அதிர்வுகளை கொண்டு சரியான நேரத்தை கணக்கிடுகிறது.