அறிமுகப்படுத்தி இரண்டு நாட்களிலேயே Threads-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது மெட்டா
ட்விட்டருக்குப் போட்டியாக கடந்த சில நாட்களுக்கு முன் 'த்ரெட்ஸ்' என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா. இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையில் இந்த புதிய சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களிலேயே 70 மில்லியன் பயனர்களைப் பெற்றிருக்கும் த்ரெட்ஸின் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது மெட்டா. ட்விட்டரின் போட்டியாளர் என்றாலும், ட்விட்டரில் இருக்கும் பல அம்சங்கள் த்ரெட்ஸில் இல்லை. மேலும், புதிய சமூக வலைத்தளம் என்பதால் சில பாதுகாப்பு கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தான், சில வசதிகளையும், கோளாறுகளையும் சரிசெய்யும் விதமாக பீட்டா வெர்ஷன் ஒன்றை மெட்டா வெளியிட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீட்ட வெர்ஷனை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள், ப்ளே ஸ்டோரில் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதிய சாதனை படைத்த த்ரெட்ஸ் சமூக வலைத்தளம்:
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கு மட்டும் உலகின் 100 நாடுகளில் வெளியிடப்பட்டது த்ரெட்ஸ் சமூக வலைத்தளம். ப்ளே ஸ்டோரில் வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே 2 மில்லியன் பயனாளர்களையும், ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் பயனாளர்களையும், 12 மணி நேரத்தில் 30 மில்லியன் பயளாளர்களையும் பெற்று புதிய சாதனையைப் படைத்திருக்கிறது த்ரெட்ஸ். இந்த புதிய சமூக வலைத்தளம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே, 50 மில்லியன் கணக்குகள் தொடங்கப்பட்டு, 95 மில்லியன் பதிவுகள் பதிவிடப்பட்டிருக்கின்றன. மேலும், 24 மணி நேரத்திற்குள்ளேயே 190 மில்லியன் லைக்குகளும் இடப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக கட்டண சேவையாக மாறி வரும் ட்விட்டருக்கு போட்டியாக வெளியிடப்பட்டிருக்கும் த்ரெட்ஸூக்கு இணையப் பயனர்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.