LOADING...
அமெரிக்காவிலிருந்து தென்காசிக்கு வந்த இன்டெல் இயக்குனர்; சிப் வடிவமைப்பில் உலகையே மிரட்டப்போகும் தமிழகத்தின் சிறிய நகரம்
தென்காசியில் செமிகண்டக்டர் புரட்சி

அமெரிக்காவிலிருந்து தென்காசிக்கு வந்த இன்டெல் இயக்குனர்; சிப் வடிவமைப்பில் உலகையே மிரட்டப்போகும் தமிழகத்தின் சிறிய நகரம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 13, 2026
10:50 am

செய்தி முன்னோட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அமைதியான ஆன்மீக நகரமான தென்காசி, இப்போது இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வருகிறது. இதுவரை விவசாயத்திற்கும், குற்றாலச் சாரலுக்கும் பெயர்பெற்ற இந்த மாவட்டம், தற்போது டீப்-டெக் (Deep-tech) எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப வல்லுநர்களைத் தன் பக்கம் ஈர்த்து வருகிறது. அமெரிக்காவின் இன்டெல் நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராகப் பணியாற்றிய ஆனந்தன் ஐயாசாமி, இங்கு தென்காசி செமிகண்டக்டர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

செமிகண்டக்டர்

மென்பொருளிலிருந்து செமிகண்டக்டர் வரை

சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, கடந்த பத்து ஆண்டுகளாகத் தென்காசியில் ஒரு கிராமப்புற தொழில்நுட்பச் சூழலை உருவாக்கி வருகிறார். தற்போது அவர் ஆனந்தன் ஐயாசாமியுடன் இணைந்து சிப் வடிவமைப்பு துறையில் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளார். பல பில்லியன் டாலர் செலவாகும் சிப் தயாரிப்பு ஆலைகளுக்குப் பதிலாக, அறிவுசார் சொத்து மற்றும் பொறியியல் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிப் டிசைன் துறையில் தென்காசி கவனம் செலுத்துகிறது. தென்காசியில் வடிவமைக்கப்படும் சிப்கள், குஜராத்தில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலைகளிலோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களிலோ உற்பத்தி செய்யப்படலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சோஹோ

சோஹோ போட்ட விதை

2011 ஆம் ஆண்டு மத்தளம்பாறை கிராமத்தில் வெறும் 6 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட சோஹோவின் அலுவலகம் தான் இன்றைய இந்த மாற்றத்திற்கு அடிப்படை. கிராமப்புற இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத் திறமை கிடைக்குமா என்று சந்தேகப்பட்டவர்களுக்கு, இன்று 1,200 ஊழியர்களுடன் தென்காசியில் இயங்கி வரும் சோஹோ பதிலளித்துள்ளது. "திறமையானவர்கள் நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற விதியை மாற்றி, தொழில்நுட்பத்தைத் தேடி கிராமங்களுக்குக் கொண்டு வந்ததில் ஸ்ரீதர் வேம்புவின் பங்கு மிக முக்கியமானது." என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

திறமையாளர்கள்

திரும்பும் உலகளாவிய திறமையாளர்கள்

தற்போது தென்காசியில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமல்லாமல், உலகளவில் பல சாதனைகளைப் படைத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர்களும் குடியேறத் தொடங்கியுள்ளனர். அமைதியான வாழ்க்கை முறை, பிராந்திய வளர்ச்சிக்கான பங்களிப்பு மற்றும் கிராமப்புறங்களில் புதைந்துள்ள திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஆகியவையே இந்த 'ரிவர்ஸ் மைக்ரேஷன்' (Reverse Migration) எனப்படும் பின்திரும்பும் இடப்பெயர்விற்கு முக்கியக் காரணம். தென்காசியின் இந்த வளர்ச்சி, இந்தியாவின் மற்ற கிராமப்புற பகுதிகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement