வெளியானது டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் போன்!
ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த தொழில்நுட்ப முன்னேற்றம் என்றால் அது ஃபோல்டபிள் போன்கள் (Foldable Phone) தான். இது வரை இந்தியாவில் உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் மட்டுமே ஃபோல்டபிள் போன்களை வெளியிட்டுள்ளது. அடுத்த ஃபோல்டபிள் போனை ஆப்பிள் நிறுவனமோ அல்லது ஒன்பிளஸ் நிறுவனமோ வெளியிடும் என எதிர்பார்ப்புகள் இருக்க, சீனாவைச் சேர்ந்த வளர்ந்து வரும் நிறுவனமான டெக்னோ (Tecno) என்ற நிறுவனம் இந்தியாவில் ஃபோல்டபிள் போனை அறிமுகம் செய்திருக்கிறது. 'டெக்னோ பேண்டம் V ஃபோல்டு' எனற் ஃபோல்டபிள் போன் மாடலை இந்தியாவில் ரூ.88,888-க்கு வெளியிட்டிருக்கிறது டெக்னோ. அறிமுக சலுகையாக ரூ.77,777-க்கே இந்த போனை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அதிரடியாக அறிவித்திருக்கிறது டெக்னோ.
எப்படி இருக்கிறது இந்த புதிய போன்?
மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ சிப்செட், 12 GB ரேம் மற்றும் 512 GB ஸ்டோரேஜ், 5,000 mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 120 Hz ரெப்ரஷ் ரேட், 50 MP பிரதான கேமரா, 13 MP அல்ட்ரா-வைடு சென்சார், 50 MP போர்ட்ரெய்ட் கேமரா, வெளிப்புற ஸ்கிரீனில் 32 MP கேமரா மற்றும் முன்பக்க 16 MP கேமராவுடன் வருகிறது இந்த புதிய டெக்னோ ஃப்ளாக்ஷிப் போன். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உண்டு. கிட்டத்தட்ட சாம்சங் ஃபோல்டபிள் போனில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் இந்த போனிலும் கொடுக்க முயன்றிருக்கிறது டெக்னோ.