LOADING...
என்விடியாவுக்கு சவால் விடும் டிசிஎஸ்; ஏஎம்டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பிரம்மாண்ட ஏஐ புரட்சி
என்விடியாவுக்குப் போட்டியாக இந்தியாவில் டிசிஎஸ் - ஏஎம்டி மெகா கூட்டணி

என்விடியாவுக்கு சவால் விடும் டிசிஎஸ்; ஏஎம்டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பிரம்மாண்ட ஏஐ புரட்சி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 16, 2026
06:34 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் மற்றும் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான ஏஎம்டி ஆகியவையும் தங்களது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கூட்டணியை விரிவுபடுத்தியுள்ளன. டெல்லியில் இன்று தொடங்கிய ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், ஏஐ சிப் சந்தையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் என்விடியா நிறுவனத்திற்குப் போட்டியாக இந்தியாவிலேயே ஒரு வலுவான ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க இவை திட்டமிட்டுள்ளன.

ஹீலியோஸ்

ஹீலியோஸ் ஏஐ தளம்

இந்தக் கூட்டணியின் கீழ், ஏஎம்டி நிறுவனத்தின் ஹீலியோஸ் பிளாட்பார்மை அடிப்படையாகக் கொண்டு புதிய ஏஐ டேட்டா சென்டர் வடிவமைப்புகளை டிசிஎஸ் உருவாக்கும். டிசிஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹைப்பர் வால்ட் ஏஐ டேட்டா சென்டர் லிமிடெட் மூலம் இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் செயல்படுத்தப்படும். இது சுமார் 200 மெகாவாட் மின் திறன் வரை விரிவுபடுத்தக்கூடிய ஒரு பிரம்மாண்ட உள்கட்டமைப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கு

நிறுவனங்களின் இலக்கும் செயல்பாடும்

இந்தத் திட்டத்தின் கீழ் ஏஎம்டி நிறுவனம் அதன் முழுமையான ஏஐ கம்ப்யூட்டிங் தளங்களை வழங்கும். டிசிஎஸ் நிறுவனம் அதன் டேட்டா சென்டர் பொறியியல் மற்றும் ஒருங்கிணைப்புத் திறன்களைப் பயன்படுத்தும். இது குறித்துப் பேசிய ஏஎம்டி தலைமை அதிகாரி லிசா சூ, "ஏஐ பயன்பாடு தற்போது சோதனைக் கட்டத்திலிருந்து பெரிய அளவிலான செயல்பாட்டிற்கு மாறியுள்ளது. இதற்கு புதிய உள்கட்டமைப்பு தேவை." என்று குறிப்பிட்டார். டிசிஎஸ் தலைமை அதிகாரி கே.கிருதிவாசன், "இது இந்தியாவில் ஏஎம்டி தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் ஏஐ உள்கட்டமைப்பிற்கு அடித்தளம் அமைக்கும்." என்று தெரிவித்தார்.

Advertisement

தாக்கம்

இந்திய சந்தையில் இதன் தாக்கம்

இந்தியாவில் அரசு சார்ந்த ஏஐ திட்டங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஏஐ தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே என்விடியா நிறுவனம் ரிலையன்ஸ் மற்றும் டாடா குழுமத்துடன் ஏஐ ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள நிலையில், ஏஎம்டி தற்போது டிசிஎஸ் மூலம் தனது பிடியை வலுப்படுத்துகிறது. இது இந்தியாவில் ஏஐ உள்கட்டமைப்புச் செலவைக் குறைக்கவும், வேகமான பயன்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement