Loading...
நேரடியாக போனுக்கு சாட்டிலைட் நெட்வொர்க்! 30,000 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவில் நுழைய ஸ்டார்லிங்க் மீண்டும் விண்ணப்பம்
இந்தியாவில் ஸ்டார்லிங்க் மீண்டும் விண்ணப்பம்

நேரடியாக போனுக்கு சாட்டிலைட் நெட்வொர்க்! 30,000 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவில் நுழைய ஸ்டார்லிங்க் மீண்டும் விண்ணப்பம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 20, 2026
12:51 pm

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம், தனது அடுத்த தலைமுறை ஜென் 2 சாட்டிலைட் கம்யூனிகேஷன் நெட்வொர்க்கை இந்தியாவில் செயல்படுத்துவதற்காக நாட்டின் விண்வெளி கட்டுப்பாட்டு அமைப்பான இன்-ஸ்பேஸ் நிறுவனத்திடம் மீண்டும் புதிதாக விண்ணப்பித்துள்ளது. சுமார் 30,000 தாழ்வட்ட புவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

டி2டி தொழில்நுட்பம்

நேரடியாக மொபைல் போன்களை இணைக்கும் 'டி2டி' தொழில்நுட்பம்

ஸ்டார்லிங்க் சமர்ப்பித்துள்ள இந்த புதிய விண்ணப்பத்தில் டைரக்ட்-டு-டிவைஸ் (D2D) எனும் நவீன தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் எவ்வித கூடுதல் உபகரணங்களும் இன்றி, செயற்கைக்கோள் நெட்வொர்க்கை நேரடியாகப் பயனாளர்களின் சாதாரண ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க முடியும்.

இந்தியாவில் இத்தகைய 'டி2டி' தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வரும் சூழலில், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்த நகர்வு இந்திய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய நிராகரிப்பு

முந்தைய நிராகரிப்பும் 'ஜென் 1' செயற்கைக்கோள்களுக்கான அனுமதியும்

ஏற்கெனவே ஜென் 1 மற்றும் ஜென் 2 நெட்வொர்க்குகளுக்கு ஸ்டார்லிங்க் விண்ணப்பித்திருந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மற்றும் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்காததால் முந்தைய ஜென் 2 விண்ணப்பத்தை இன்-ஸ்பேஸ் நிராகரித்திருந்தது.

இருப்பினும், பாரம்பரிய பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்காக 4,408 செயற்கைக்கோள்களை கொண்ட ஸ்டார்லிங்கின் ஜென் 1 திட்டத்திற்கு 2025 ஜூலை மாதத்திலேயே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது விதிகளைப் பூர்த்தி செய்து மீண்டும் ஜென் 2 திட்டத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

போட்டி நிறுவனங்கள்

சர்வதேசத் திட்டமும் போட்டி நிறுவனங்களின் நிலவரமும்

உலகளவில் 42,000 ஜென் 2 செயற்கைக்கோள்களை ஏவ ஸ்டார்லிங்க் திட்டமிட்டுள்ள போதிலும், இந்தியாவில் முதற்கட்டமாக 30,000 செயற்கைக்கோள்களுக்கு அனுமதி கோரியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அமேசான் நிறுவனத்தின் லியோ மற்றும் யூட்டல்சாட் ஒன்வெப் ஆகிய போட்டி நிறுவனங்களை விட சேவையின் வேகம் மற்றும் பரப்பளவில் ஸ்டார்லிங்க் மிகப்பெரிய முன்னிலையைப் பெறும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

தடை

வணிக ரீதியான சேவைத் தொடக்கத்திற்கு நிலவும் தடைகள்

இந்தியாவில் செயற்கைக்கோள் சேவைகளைத் தொடங்க இன்-ஸ்பேஸ் அமைப்பின் முன்அனுமதி கட்டாயமாகும்.

இருப்பினும் பாதுகாப்பு சார்ந்த அனுமதிகள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான கொள்கை முடிவுகள் இன்னும் இறுதியாகாததால், ஸ்டார்லிங்க் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனமும் இந்தியாவில் வணிக ரீதியிலான சேவையை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை.

அரசு கொள்கை முடிவுகளை இறுதி செய்த பின்னரே இந்தியாவில் சாட்டிலைட் இணைய சேவைகள் முழுவீச்சில் பயன்பாட்டிற்கு வரும்.

ADVERTISEMENT