LOADING...
இனி என்ஜினியர்கள் கோட் எழுத மாட்டார்கள்; ஸ்பாடிஃபை நிறுவனத்தில் ஹான்க் ஏஐ புரட்சி; எலான் மஸ்க் கணிப்பு நனவாகிறதா?
ஸ்பாடிஃபை நிறுவனத்தில் ஹான்க் ஏஐ புரட்சி

இனி என்ஜினியர்கள் கோட் எழுத மாட்டார்கள்; ஸ்பாடிஃபை நிறுவனத்தில் ஹான்க் ஏஐ புரட்சி; எலான் மஸ்க் கணிப்பு நனவாகிறதா?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 14, 2026
11:41 am

செய்தி முன்னோட்டம்

மென்பொருள் துறையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் முன்னணி இசை செயலியான ஸ்பாடிஃபை, தனது உயர்மட்ட மென்பொருள் பொறியாளர்கள் 2025 டிசம்பர் மாதம் முதல் ஒரு வரி கோடிங் கூட கைப்பட எழுதவில்லை என்ற அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்குப் பதிலாக, அந்த நிறுவனம் உருவாக்கியுள்ள ஹான்க் ஏஐ என்ற சொந்த ஏஐ தொழில்நுட்பமே அனைத்து வேலைகளையும் கவனித்து வருகிறது.

ஹான்க் ஏஐ

ஹான்க் ஏஐ என்றால் என்ன?

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் கோட் (Claude Code) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹான்க் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் கோட் எழுதுவதுடன் நின்றுவிடாமல், மென்பொருளில் ஏற்படும் பிழைகளைச் சரிசெய்தல் மற்றும் புதிய வசதிகளைச் சேர்த்தல் போன்ற வேலைகளையும் செய்கிறது. என்ஜினியர்கள் தங்களின் செல்போன் மூலமாகவே, அலுவலகம் செல்லும் வழியில் ஸ்லாக் செயலி வழியாக ஏஐக்கு கட்டளைகளைப் பிறப்பிக்கலாம். ஒரு என்ஜினியர் அலுவலகம் சென்றடைவதற்கு முன்பே, அவர் சொன்ன வேலையை ஏஐ முடித்து, அந்த புதிய வசதியுடன் கூடிய ஆப்பை அவரிடமே சமர்ப்பித்து விடுகிறது. அவர் அதைச் சரிபார்த்து உறுதி செய்தால் மட்டும் போதுமானது.

கணிப்பு

எலான் மஸ்க் கணிப்பு நிஜமாகிறதா?

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் கோடிங் என்ற தொழிலே மறைந்துவிடும் என்று எலான் மஸ்க் ஏற்கனவே கணித்திருந்தார். தற்போது ஸ்பாடிஃபை, கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஏஐயை அதிகளவில் பயன்படுத்துவது அந்த கணிப்பை மெய்ப்பிப்பது போல் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் ஸ்பாடிஃபை 50 க்கும் மேற்பட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2026 இன் தொடக்கத்தில் பிராம்ப்ட் பிளேலிஸ்ட் (Prompted Playlists) போன்ற வசதிகள் சில வாரங்களிலேயே உருவாக்கப்பட்டது ஏஐயின் வேகத்திற்கு சான்றாகும்.

Advertisement

வேலைவாய்ப்பு

என்ஜினியர்களின் வேலை பறிபோகுமா?

இந்தத் தொழில்நுட்பம் வந்தவுடன் என்ஜினியர்களின் வேலை போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை என ஸ்பாடிஃபை இணை சிஇஓ குஸ்டாவ் சோடர்ஸ்ட்ரோம் விளக்கியுள்ளார். என்ஜினியர்கள் இனி இயந்திரத்தனமாக கோட் எழுத மாட்டார்கள். அதற்குப் பதிலாக, ஏஐ செய்த வேலையை சரிபார்ப்பது, மென்பொருளின் கட்டமைப்பு மற்றும் புதிய தயாரிப்புகள் குறித்த முக்கியமான முடிவுகளை எடுப்பது போன்ற உயர்நிலை வேலைகளில் ஈடுபடுவார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் ஏஐ வேலையை செய்யும். மனிதர்கள் அந்த வேலையை சரியாக உள்ளதா என்று தீர்மானிப்பார்கள். தொழில்நுட்ப உலகில் இது ஒரு தொடக்கம்தான் என்றும், வருங்காலத்தில் ஏஐயின் பங்களிப்பு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் ஸ்பாடிஃபை நம்புகிறது.

Advertisement