புளோரிடாவில் இருந்து வருடத்திற்கு 120 முறை ராக்கெட்டுகளை ஏவ ஸ்பேஸ்X திட்டம்: போட்டியாளர்கள் அதிருப்தி
நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆண்டுக்கு 44 முறை ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட்டை ஏவுவதற்கு ஸ்பேஸ்X தயாராகி வரும் நிலையில், ஸ்பேஸ்Xயின் இந்த லட்சியத் திட்டங்கள் அதன் போட்டியாளர்கள் சிலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஸ்டார்ஷிப்பின் செயல்பாடுகள் பிற நிறுனங்களின் ஏவுதலை பாதிப்பதால், அப்பகுதியில் உள்ள பிற நிறுவனங்களுக்கு இடையூறு செய்யாமல் செயல்படுமாறு கடந்த மாதம் ப்ளூ ஆரிஜின் மற்றும் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அழைப்பு விடுத்தன. மேலும், ஸ்டார்ஷிப் செயல்பாடுகளை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுப்படுத்த ப்ளூ ஆரிஜின் பரிந்துரைத்தது.
இன்னொரு ஏவுதளத்தை நிறுவ இருக்கும் ஸ்பேஸ்X
இதற்கிடையில், ஸ்பேஸ்X அதற்கு பக்கத்திலேயே இன்னொரு ஏவுதளத்தை நிறுவ முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்தில்(CCSFS) அமைக்கப்படும் அந்த ஏவுதளத்திற்கு விண்வெளி ஏவுதள வளாகம்(SLC)-37 என்று ஸ்பேஸ்X பெயரிட்டுள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களில் இது குறித்து பேசிய ஸ்பேஸ்X , SLC-37 இலிருந்து ஆண்டுக்கு 76 முறை ஸ்டார்ஷிப்பை ஏவுவதற்கான திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது. அதாவது ஸ்பேஸ்X அதன் அடுத்த தலைமுறை ராக்கெட்டை புளோரிடா கடற்கரையில் இருந்து வருடத்திற்கு 120 முறை ஏவ திட்டமிட்டுள்ளது. இது அதே பகுதியில் இயங்கும் ஸ்பேஸ்Xயின் போட்டியளர்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.